2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டுத் தலையீடு: உத்தரவாதமல்ல அர்ப்பணிப்பாகும்

Gavitha   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, வெளிநாட்டு நீதிபதிகளும் வழக்குத் தொடுநர்களும், கணிசமான பங்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதனூடாக,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வழங்கிய அர்ப்பணிப்புகளை நிறைவேற்ற வேண்டுமென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பி.பி.சி ஊடகத்துக்கு, சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய நேர்காணலைத் தொடர்ந்தே, இந்தக் கோரிக்கையை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வழங்கியுள்ளது.

அந்த நேர்காணலில், 'சர்வதேச ஈடுபாட்டுக்கு எப்போதும் அனுமதிக்க மாட்டேன்' என்றும், 'எங்களுடைய உள்விவகாரங்களைத் தீர்ப்பதற்கு எங்கள் நாட்டில் எங்களிடம், தேவைக்கு அதிகமான விசேட திறமையுடையோர், நிபுணர்கள், அறிவார்ந்த மக்கள் உள்ளனர்' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், இதற்குப் பதிலளித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், போர்க்குற்றத் தீர்ப்பாயத்தில், வெளிநாட்டுப் பங்களிப்பென்பது தீர்மானிக்கப்பட்டது என்பதையும், அதில் பேரம் பேசலுக்கு இடமில்லை என்பதையும், மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த இலங்கை, அந்தத் தீர்மானத்துக்கான இணை அனுசரணையாளராக இணைந்து கொள்வதில் இலங்கை மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததோடு, அந்தத் தீர்மானத்தின் விடயங்களை அமுல்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்ததையும், அக்கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

'நீதியையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்துவதற்காக, வெளிநாட்டு ஈடுபாட்டை இலங்கை தேடியது. அதிலிருந்து பின்வாங்க முடியாது' என, கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்தார். 'போர்க்குற்றத் தீர்ப்பாயத்தில் வெளிநாட்டுப் பங்களிப்பென்பது, ஐ.நா சபையின் வழங்கப்பட்ட வெறும் உத்தரவாதமல்ல, மாறாக, இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தத்தால் வருந்திய ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கான உறுதியான அர்ப்பணிப்பு என்பதை, ஜனாதிபதி சிறிசேன புரிந்துகொள்ள வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

'ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையுடன் இணைந்த நெருக்கமாகச் செயற்பட்ட நாடுகள் அனைத்துக்கும், முக்கியமான அந்தத் தீர்மானம், முறையான அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு உண்டு' எனத் தெரிவித்த அவர், அரசியல் கணிப்புகளின் அடிப்படையில், நீதிக்கான நம்பிக்கையை இல்லாது போய்விட்டது என, போரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உணருமாயின், சிறிசேன நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட அடைவுகள், இல்லாது போய்விடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X