2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘இராணுவத்தினரின் கௌரவத்தை காப்பேன்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கமே, இராணுவத்தினரின் நலனில் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது என்று  தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எது எவ்வாறாயினும், இராணுவத்தினரின் கௌரவத்தைத் தான் தொடர்ந்து காப்பாற்றுவதாகவும் அதற்காக, தான் உள்ளிட்ட தனது அரசாங்கம், அயராது உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.  

ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற இராணுவ மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்தும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக, தொழில்நுட்ப அதிகாரிகளாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 50 இராணுவ வீரர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

தொடர்ந்தும் சேவையாற்றக்கூடிய வயதில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை, மீண்டும் தேசிய அபிவிருத்திக்காக பயன்படுத்தி, அதனூடாக அவர்களது நலன் பேணலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய திட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும்.  

அரச சேவையில் உரிய காலத்தைப் பார்க்கிலும், மிகக்குறைந்த வயதெல்லைகளில் ஓய்வுபெறும் இராணுவ வீரர்கள்,  தமது அறிவு மற்றும் அனுபவங்களை நாட்டுக்கு முழுமையாகப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்திலேயே சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர் என இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, “ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு நியமனம் வழங்குவதன் மூலம், அரச சேவையில் புதிய ஆளணிச் சேர்ப்புக்கு எவ்விதத் தடையும் ஏற்படப்போவதில்லை” என்றார்.  

தற்போதைய அரசாங்கம் இராணுவ வீரர்களைக் கவனிப்பதில்லை என்று சிலர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதும், கடந்த அனைத்து அரசாங்கங்களைப் பார்க்கிலும், தற்போதைய அரசாங்கமே, இராணுவ வீரர்களின் நலன் பேணலை மேற்கொண்டு, அவர்களது கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இந்த நியமனங்களை வழங்குவதன் மூலம், அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது என்று, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

ஓய்வுபெற்றுள்ள நிலையில் நாட்டின் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 113,598 ஆகும். 

மேற்படி இராணுவ வீரர்களுக்குத் தொழில்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களது நலன் பேணவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு தனியான பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் பேணல் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர்  இணையத்தளமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .