2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'கை'யில் வந்தால் இருவரும் ஆதரவு

Thipaan   / 2016 ஜனவரி 20 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, கைச் சின்னத்தில் போட்டியிடுமாயின் அதற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ (எம்.பி) ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமானஎஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் ஆலோசகர்களான முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகாவும் மஹிந்தவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகையால், கிராம மட்ட மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற வெற்றியை, அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்காத  கை மற்றும் நாற்காலிச் சின்னங்களுக்கு வாக்களித்த 7 இலட்சம் வாக்குகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எமக்கு கிடைக்காமல் போய்விட்டன.

அதேபோல, எங்களுக்கு 15 சதவீத முஸ்லிம் வாக்குகள் எந்நாளும் இருந்தன. அது நான்கு சதவீதமாக குறைந்தது. நகரங்களில் 35 சதவீதமான வாக்குகள் இருந்தன. அதுவும் 20 சதவீதத்துக்கு குறைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்க வாக்குகள் 40 சதவீதம் இருந்தன. அதுவும் 20 சதவீதமாக குறைந்தது.  அவற்றையெல்லாம் நாங்கள் மாற்றி, மீண்டும் பலமானதொரு கட்சியாக எங்களுடைய எதிர்காலத்தை கவனத்தில் எடுத்துகொண்டு செயற்படுகின்றோம்.

கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் இக்கட்சியை உடைப்பதற்கு ஒரு குழுவினர் இருக்கின்றனர். சிலரின் கூற்றுக்களின் ஊடாக அவை தெளிவாகின்றது. அவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

அடுத்த தேர்தல் தீர்க்கமானது. கூட்டணியாக போட்டியிட்டு வெற்றியீட்டினால் அவற்றை பிரித்துகொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். என்பதனால் ஊடகங்களுக்கு தெரியாத பாரிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X