2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘தாஜுதீனின் எலும்புகள் அனுப்பப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித எலும்புகளை வழங்கும் போது தமக்கு வழங்கப்பட்ட பட்டியலில், வசீம் தாஜுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலிருந்து எலும்புகள் வழங்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகத்துக்கு (SAITM) எந்தவித அதிகாரமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ள SAITM, வசீம் தாஜுதீனின் எலும்புகள் எவையும் SAITM-க்கு அனுப்பப்பட்டதற்கான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.  

தற்போது புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் தொடர்பில், நேற்று திங்கட்கிழமை (10) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,  

எமது கல்வியகத்தில் மனித உடல் பாகங்கள் மற்றும் எலும்புகள் போன்றன, கல்விச் செயற்பாடுகளுக்காக மாத்திரமே பேணப்படுகின்றன, இது பெருமளவான மருத்துவ பீடங்களில் பொதுவான விடயமாகும். இந்த மாதிரிகள், எமது மருத்துவ போதனா வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக பேணப்படுகின்றன.  

30.11.2011 திகதியிடப்பட்ட 1721/19 மற்றும் 26.09.2013 திகதியிடப்பட்ட 1829/36 ஆகிய வர்த்தமானி அறிவித்தல்களின் பிரகாரம், மருத்துவ பட்டமளிப்பை வழங்கும் அதிகாரம் கொண்ட கல்வியகமாக SAITM அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, மருத்துவத்தில் இளமானிப் பட்டம் மற்றும் சத்திரசிகிச்சையில் இளமானிப் பட்டம் ஆகியவற்றை வழங்கும் தகைமையை, கல்வியகம் கொண்டுள்ளது.  

கல்வி நடவடிக்கைகளுக்காக எலும்புகளுக்கான கோரிக்கையை நாம் 2011ஆம் ஆண்டில் மேற்கொண்டிருந்தோம். இது தாஜுதீனின் மரணத்துக்கு பல காலத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

SAITM இனால் பெறப்பட்ட சகல மாதிரிகளும் முறையான மேற்பார்வை மற்றும் அனுமதிகளுக்கமைய பெறப்பட்டிருந்தன. சகல மாதிரிகளும் முறையாகப் பதியப்பட்டுள்ளன. பொலிஸ் மற்றும் கடுவெல பிரதேச சபை ஆகியவற்றிடமிருந்து இதற்கான அனுமதியை நாம் பெற்றிருந்தோம்.  

SAITMஇலிருந்து பெறப்பட்ட எலும்புகள் பற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனும் கருத்து வெளியாகியிருந்ததைத்தொடர்ந்து, உபவேந்தரான பேராசிரியர் சமரசேகர, சுயமாக விடுமுறையைக் கோரியிருந்தார். இதன் மூலமாக SAITM இல் சகல பரிசோதனைகளும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக முன்னெடுக்க வழிகோலியிருந்தார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .