2021 மே 08, சனிக்கிழமை

100 ரூபாயைக் கேட்டு 5 மணிநேரம் மலையகத்தலைமைகள் குந்தினர்

Kanagaraj   / 2016 மே 27 , மு.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைவர்களின் நாடகம் கோட்டையில் அரங்கேற்றம்

படங்களை எடுத்தவுடன் சில தலைவர்கள் மாயம்

வாகனத்துக்கும் மேடைக்கும் சிலர் உலாவியே திரிந்தனர்

14 நாட்கள் காலக்கெடுவை விதித்துவிட்டுப் பறந்தனர்

-பா.திருஞானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் சம்பளத்தொகையுடன், நாளொன்றுக்கு 100 ரூபாயை இணைத்து, இடைக்கால நிவாரணத்தொகையாக வழங்குமாறு வலியுறுத்தி, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஐந்தே ஐந்து மணித்தியாலயங்கள் மட்டுமே கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்மேளம் என்ற பதாதைகளின் கீழ், எப்போதும் எழுந்து ஓடுவதற்குத் தயாரான வகையில், அந்த மேடையின் விளிம்புகளில், நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வந்து குந்திய மலையகத் தலைவர்கள், மாலை 3 மணியளவில் அந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் சம்பளத் தொகையுடன் இடைக்கால நிவாரணத் தொகையாக நாளொன்றுக்கு 100 ரூபாயை இணைத்து வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை இழுபறி நிலையில் முடிவடைந்தமையால், தமிழ் முற்போக்கு கூட்டணி, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், அமைச்சர் ப.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையிலேயே இப்போராட்டம் நடைபெற்றது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக்ராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் வடிவேல் சுரேஷ் உள்ளிட்டவர்களும் கூட்டணியை பிரதிநித்துவப்படுத்தும் மாகாண, பிரதேச சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அடங்களாக சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

இதேவேளை, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்காரவும் இந்தப்போராட்டத்தில் சிறிதுநேரம் பங்கேற்றிருந்தார்.

சுமார் 5 மணித்தியாலயங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த முக்கியஸ்தர்களில் சிலர், கூடுதலான நேரத்தை தங்களுடைய வாகனங்களிலேயே  செலவிட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இன்னும் சில முக்கியஸ்தர்கள் படங்களை எடுத்தவுடன், அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் இன்னும் சிலர் மேடைக்கும் வாகனத்துக்கும் இடையில் உலாவித் திரிந்ததையும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், மாலை 3 மணியளவில் அறிவிப்பொன்றை விடுத்த சத்தியக்கிரகப்போராட்ட ஏற்பாட்டாளர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்த கோரிக்கை தொடர்பில், ஆராய்ந்து நல்ல பதிலை அளிப்பதற்காக அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஜோன் அமரதுங்க மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்காக இந்த சத்தியாக்கிரகப்போராட்டத்தை இத்துடன் கைவிடுகின்றோம். 14 நாட்களுக்குள் உரிய பதில் கிடைக்கவிடின், இந்த போட்டத்தை நாடாளாவிய ரீதியில் விஸ்தரிப்போம் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X