2025 மே 15, வியாழக்கிழமை

செய்லானியின் குடும்பத்தாரிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் முஸ்தீபு

Kanagaraj   / 2015 ஜூலை 22 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து சிரியாவில் விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராய் செய்லானி என்ற 37 வயதான மேற்படி நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை நடத்துமாறு மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரை பணித்துள்ள பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், அதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றையும் நியமித்துள்ளார். 

கண்டி, வெரல்லகமவில் பிறந்த முஸ்லி நிலாம்தன் என்ற இயற்பெயருடைய இந்நபர், மேற்படி பயங்கரவாத அமைப்பில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடிய போது, அமெரிக்க வான்படையினர் கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார். அபு செய்லானி என்று தன்னை அந்த தீவிரவாத அமைப்பில் அடையாளப்படுத்திக்கொண்ட மேற்படி நபர், அவ்வமைப்பில் இணைவதற்கு முன்னர் கலேவெல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 
அத்துடன், கராத்தே ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார் எனவும் 2014ஆம் ஆண்டில் கலேவெல முஸ்லிம் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வொன்றின் போது விசேட உரையொன்றையும் ஆற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்நபர் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .