2025 மே 17, சனிக்கிழமை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சான்றாவணத்தைக் கையளித்தார்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதுல் கைஷப், கொழும்பில் இன்று நடைபெற்ற நிழ்வின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது தகைமைச் சான்றாவணத்தைக் கையளித்தார். 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அதுல் கைஷப்பின் உத்தியோகபூர்வ பணி ஆரம்பத்தினைக் குறிப்பதாக இந்த நிகழ்வு அமைந்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தொழில்சார் இராஜதந்திரியான தூதுவர் அதுல் கைஷப், தமது தொழில் வாழ்க்கையின் பெரும் பகுதியினை இலங்கை உள்ளடங்கலாக அண்ணளவாக 1.7 பில்லியன் மக்கள் தொகையையும், 2 திரில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதார பாய்ச்சலையும் கொண்டுள்ள மூலோபாயம் மிக்க பிராந்தியமாகத் திகழும் தெற்காசியாவினை இலக்காகக் கொண்டு பணியாற்றியுள்ளார்.

கடைசியாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணிமனையின் பிரதி உதவி இராஜாங்கச் செயலாளராக அவர் கடமையாற்றினார்.  

இந்தியாவின் புதுடெல்லி, மொரோக்கோவின் ரபாட், கினியாவின் கொனக்ரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இலங்கையில் தமது புதிய நியமனம் தொடர்பில் தூதுவர் கேஷப் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். “என்னுடைய தொழில் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தத் தீவின் அளவற்ற இயற்கை எழிலாலும், ஒப்பற்ற விருந்தோம்பலினாலும், மக்களின் உபசரிப்பினாலும் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன்” என ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி வொஷிங்டன் நகரில் தமது உத்தியோகபூர்வ பதவிப்பிரமாண நிகழ்வின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .