2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

5 வயது சிறுமி கொலை: சந்தேகநபருக்கு 72 மணிநேர தடுப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான், நேற்று வியாழக்கிழமை (24) சீ.ஐ.டியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்,  பதுவத் துகொட காட்டில் மறைந்திருந்த போது புதன்கிழழை (23) கைதுசெய்யப்பட்டிருந்தார். 13 நாட்களுக்கு பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர், சேயா சந்தவமியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தம்மால் சந்தேகப்பட்ட இருவர், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார், ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டார்.

அதில், ஒருவர் மனித படுகொலையுடன் தொடர்புடையவர் என்றும், மற்றொருவர் பெண்கள், சிறுமிகள் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, பெண் சடலத்தையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் என்றும் பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயதான சிறுமி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X