2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

9ஆவது பணக்காரருக்கு குறிவைத்த கல்யாண ராணியின் நிலை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் ஆசிரியர் ஒருவர் செய்த செயல் முகம் சுளிக்க செய்துள்ளது. ஒருவர், இருவரை அல்ல மொத்தம் 8 பேரை திருமணம் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளார். 

ஒரே ஒருவரிடம் மட்டும் ரூ.50 லட்சம் பறித்துள்ளார். 9-வதாக ஒருவரை ஏமாற்ற நினைத்தபோது போலீசிடம் சிக்கியுள்ளார் இந்த கல்யாண ராணி. 

இவர் இதுவரை 8 பேரை மட்டும் தான் அவர் ஏமாற்றினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சமீரா பாத்திமா. ஆசிரியையான இவருக்கு கடந்த 2010 ஆண்டு திருமணம் ஆனது. 

நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவர் தன்னை அழகாக இருக்கிறோம் என்று மனதில் நினைத்து பலமுறை அதனை கணவனிடன் சொல்லி காண்பிப்பாராம்.

இதனாலேயே அவருக்கு சொகுசாக வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதனால் கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தார். அதன்படி கணவரை விவாகரத்து செய்த அவர் 2வது திருமணம் செய்வதற்காக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். 

இதனை தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம், தான் முதல் திருமண வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்ததாக கூறி அனுதாபம் பெற்றுள்ளார்.

இவர் பேசும் பேச்சில் மயங்கி சிலர் திருமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவர் அதில் யார் பணக்காரராக, வசதியாக இருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்துள்ளார். பின்னர் மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார் சமீரா பாத்திமா. அதாவது, தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுவாராம்.

அதோடு போலீசில் சென்று புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் எனில் பணம் தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதில் பயந்துபோகும் நபர்களிம் முடிந்தவரை பணத்தை கறந்துவிட்டு தப்பித்து வந்துள்ளார். இப்படி இவர் மோசடி வலைகளில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரையும் வீழ்த்தியுள்ளார். 

இவரது டார்கெட் முழுக்க முழுக்க திருமணம் ஆகாத நபர்கள் தான். அதிலும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பணக்காரர்களை மட்டுமே தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

இப்படியாகவே கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் தனது கைவரிசைய 8 நபர்களிடம் காட்டி பணத்தை மோசடி செய்துள்ளார். இதில் ஒரே ஒருவரிடம் மட்டும் ரூ. 50 லட்சம் கறந்துள்ளார். இன்னொருவரிடம் ரூ.15 லட்சம் பெற்று இருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் தான் சமீரா பாத்திமா பற்றி போலீசாருக்கு தெரியவந்துள்ளது. 

நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது சமீரா என்ற பெண் என தெரியவந்தது. இதன்பேரில் நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சமீரா பாத்திமாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் சமீரா தலைமறைவானார். நீண்ட நாட்களாக வெளியில் வரவில்லை.

பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு இணங்க, 9-வது முறையாக ஒரு பணக்காரரை வீழ்த்த திட்டமிட்டபோது போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். 8 பேரை ஏமாற்றியிருக்கும் அவர் அதோடு நிற்காமல், மேலும் ஒருவரை இதேபோன்று தனது ஆசை வலையில் வீழ்த்தி இளைஞர் ஒருவரை தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைத்துள்ளார். அப்போது அந்த இளைஞரை நாக்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வரவழைத்து இருக்கிறார். 

இதனை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், அந்த கடைக்கு சென்று சமீரா பாத்திமாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அந்த இளைஞரிடம் இவர் யார் என்பது பற்றி தெரிவித்து அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை கூறினார். இதையடுத்து கைது செய்த கல்யாண ராணி சமீராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 8 பேரை மட்டும் தான் அவர் ஏமாற்றினாரா? இல்லை இன்னும் பலரை ஏமாற்றி இருக்கிறாரா என்பது விசாரணையில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .