2025 மே 17, சனிக்கிழமை

'புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

இந்த நாட்டின் புதிய அரசியல் அமைப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், அதை நிறைவேற்ற வேண்டியதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு முற்பகுதியிலாவது அது நிறைவேற்றப்படக்கூடிய நிலைமை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட முடியாது எனவும் அவர் கூறினார்.

தற்போதைய புதிய அரசியல் அமைப்பு மற்றும் அபவிருத்தி விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம், திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (28) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, '2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது, நாம் எதிர்பார்க்காத அரசியல் மாற்றம் இந்த நாட்டில் ஏற்பட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய மாற்றமாகும்' என்றார்.   

'ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் நாம் ஒரு வருடகாலமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதைத் தவிர்த்தார்கள்.

நாங்கள் கோரிக்கைகளை வைத்தபோதும், அவர்கள் எந்த விடயத்தையும் முன்வைக்கவும் இல்லை. பதில் தரவும் இல்லை. இந்த அரசாங்கம் வந்த பின்னர் நாடாளுமன்றத்தை ஓர் அரசியல் சாசன சபையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் ஒரு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டு, பல உப குழுக்கள் அமைக்கப்பட்டன. பல முக்கிய விடயங்கள் உப குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த உப குழுக்கள்; பல விடயங்களையும் ஆராய்ந்தது. மனித உரிமை, நிதி, நீதி, பொதுச்சேவை, மத்திக்கும் பிராந்தியத்துக்கும் உள்ள தொடர்புகள், சட்டம், ஒழுங்கு, அவசரகாலச்சட்ட ஒழுங்கு எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அறிக்கைகளை நடவடிக்கைக் குழுவுக்குச் சமர்ப்பித்து அந்த அறிக்கைகளை பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நடவடிக்கைக்குழு இதுவரையில் 45 தடவைகள் கூடியுள்ளதுடன், பல விடயங்கள் தொடர்பிலும் பேசியுள்ளன. அதிகாரப்பகிர்வு, ஆட்சிமுறைத் தேர்தல்முறை, சட்டத்தை ஆக்கும் முறை, நிர்வாக முறை, காணி, சட்டம் ஒழுங்கு, பொதுப்பாதுகாப்பு, நிதி ஒழுங்கு, நீதி ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பில்; நடவடிக்கைக்குழு பேசித் தீர்மானம் எடுத்திருக்கின்றன.
மூன்று விடயங்கள் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், முடிவு எடுக்கப்படவில்லை.

ஆட்சிமுறை, ஒழுங்கு, சமயம் சம்பந்தமாக நாட்டில் இருக்கக்கூடிய நிலைமை.
எம்மைப் பொறுத்தவரையில் வடகிழக்கு இணைப்புத் தொடர்பான நிலைமை பற்றி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், முடிவு எடுக்கப்படவில்லை. பல்வேறு வரைபுகள் தாபிக்கப்பட்டு அந்த விடயமாக நாங்கள் பேசி வருகின்றோம்.

புதிய அரசியல் அமைப்பு மாற்றமானது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, சகல இன மக்களுக்கம் தேவையானது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதை பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியில் காண முடிகின்றது' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .