2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திருகோணமலை சிறையிலிருந்து தப்பிய நான்கு கைதிகளில் மூன்று பேர் கைது

Menaka Mookandi   / 2011 மே 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து கடந்த மாதம் தப்பிச் சென்ற புலிச் சந்தேகநபர்கள் நால்வரில் மூவர் இன்று காலை திருகோணமலை துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் பிரகாரம் திருகோணமலை, வெருகல் மற்றும் கண்ணியா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்படி நான்கு சந்தேகநபர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இவர்கள் நால்வரும் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வந்த பொலிஸாருக்கு வெருகல் பிரதேசத்தில் இவர்களில் இருவர் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தைச் சுற்றிவளைத்த திருகோணமலை, துறைமுக பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் கண்ணியா பிரதேசத்தில் மறைந்திருந்த மற்றுமொரு கைதியையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த பொலிஸார், தப்பிச் சென்ற மற்றுமொரு கைதி தொடர்பிலும் அவர்களிடம் தகவல் திரட்டி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .