2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிங்கள மக்களை எதிர்க்கவில்லை; திட்டமிட்ட குடியேற்றங்களையே எதிர்க்கின்றோம்: சம்பந்தன்

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

 'நாம் சிங்கள மக்களை வெறுக்கவில்லை. அவர்களை எதிர்க்கவில்லை. அவர்களை நாம் சகோதரர்களாகவே மதித்து நடக்கின்றோம். அரசாங்கம் திட்டமிட்டு தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தும் சிங்களக்குடியேற்றங்களையே நாம் எதிர்க்கின்றோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை நகரில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

திருகோணமலை நகரில் இன்று திங்கட்கிழமை காலை பட்டணத்தெரு மற்றும் திருக்கடலூர் ஆகிய பகுதிகளில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதில் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதியும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் ஆகியோர் பங்கு பற்றி உரையாற்றினர். இக்கூட்டங்களுக்கு திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி தலைமை வகித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய இரா.சம்பந்தன் கூறுகையில்,

'இந்த நாட்டில் வேறு இனத்திலும் பார்க்க நீண்ட கால பாரம்பரியம் கொண்ட இனம் தமிழினம். திருக்கோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம் மற்றும் தொண்டீஸ்வரம் என் ஐந்து ஈஸ்வரங்கள் இருந்துள்ளன என்று சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் சேர் போல் பீரிஸ் தனது நூலில் எழுதியுள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் என்பதை இது வலியுறுத்துகின்றது.

எமது இத்தாயகத்திலே எம் மண்ணை நாமே ஆளக்கூடியவர்களாக வாழ்வதற்கு தேவையான சுயாட்சி அதிகாரங்களையே நாம் கோரி வருகின்றோம். எமது நீண்ட கால போராட்டத்தின் விளைவாக இன்று எப்போதுமே இராத அளவிற்கு சர்வதேச சமூகத்தின் கூர்மையான பார்வை இலங்கை மீது படிந்துள்ளது.

இந்த நிலையில் இவ்வளவு அழிவுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தங்களது அரசியல் அபிலாஷைகளை அடைவதில் இன்னும் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனிப் பெரும் கட்சியாகத் தெரிவு செய்து உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்' என்றார் சம்பந்தன்.

செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிப்ன்ரும் கட்சியாக தெரிவுசெய்வதன் மூலம் ஐ. நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட தீர்மானம் சரியானது என வலுச் சேர்க்க வேண்டும்' என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களுடன் நிச்சயம் வெற்றிபெறும். அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறும் சாத்தியமும் உண்டு' என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் உரையாற்றுகையில்,

'வாக்கு இன்று தமிழ் மக்கள் கைகளுக்கு பெரிய ஆயுதம். அதனைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிப்பெரும் கட்சியாக கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தெரிவு செய்யவேண்டும். அது நல்ல அரசியல் தீர்வு ஒன்றை சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவுவதாக நிச்சயம் அமையும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X