2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டம்; முஸ்லிம், தமிழ் பகுதிகள் புறக்கணிப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் பரீட்

'தேசத்துக்கு மகுடம்' வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பகுதிகள் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன' என்று தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் கடந்த 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அந்த நிகழ்வை தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் முற்றாகப் பகிஷ்கரித்திருந்தனர்.

இந்நிலையிலேயே தவிசாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'மூதுர் தேர்தல் தொகுதிக்குள் பெரும்பான்மையாக உள்ளடங்கும் தம்பலகமம் பிரதேச சபையின் அதிகாரப் பிரதேசமானது மூவின மக்களும் (முஸ்லிம் 53%, சிங்களம் 27%, தமிழ் 20%) ஒற்றுமையாக வாழும் பகுதியாகும். கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது மூன்று சமூகங்களும் இழப்புகளை சந்தித்ததோடு முழுப் பிரதேசமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுடையவையாகக் காணப்படுகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தினூடாக நாட்டு மக்கள் அனைவருக்கும் இன, மத, கட்சி பேதங்களில்லாமல் சேவைகள் இடம்பெற்றுவரும் வேளையில் தம்பலகாமம் பிரதேசத்தில் மாத்திரம் இனங்களுக்கிடையே துவேசத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பாகுபாடான முறையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
2012ஆம் ஆண்டில் தம்பலகாமம் பிரதேசத்தின் வீதி அபிவிருத்திப் பணிக்காக கமநெகும திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 6,090,000 ரூபா, யலி புபுதும மற்றும் குளங்கள் புணரமைக்கும் வேலைத்திட்டங்களினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளும் சிங்களக் கிராமங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டன.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகமம் பிரதேசத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 123 மில்லியன் ரூபாவில் 80 மில்லியன் ரூபா சிங்களப் பிரதேசத்திற்கும் 25 மில்லியன் ரூபா முஸ்லிம் பிரதேசத்திற்கும் 18 மில்லியன் ரூபா தமிழ்ப் பிரதேசத்திற்குமென பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் குறிப்பிட்ட வேலைத்திட்டங்களின் ஒப்பந்தங்களை அக்கிராமங்களில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டு வெவ்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட பெரும்பான்மையினத்தைச் சார்ந்த சங்கங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இனரீதியான துவேசத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முகமாக பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் ஒன்றுகூடி சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.

2013-03-03ஆம் திகதி நடத்தப்படும் தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திடங்களுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தினை பகிஸ்கரித்தல், இப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை இன விகிதாசார அடிப்படையில் பங்கீடு செய்யப்பட வலியுறுத்தல், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை குறிப்பிட்ட பகுதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கே வழங்க நடவடிக்கை எடுத்தல், பிரதேச அபவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு முஸ்லிம் தமிழ் பிரதேசங்களிலுள்ள பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தல் ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை ஜனாதிபதியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினதும் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவருதற்காக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்' என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • aj Tuesday, 05 March 2013 01:24 PM

    இங்க வந்து உங்க வீரத்தை காட்டுங்க. வாயையும் அதையும் பொத்திக்கொண்டு புலி பிரியாணி +அடிதடி அரசியல் வடக்கில் மட்டும் தானா ?

    Reply : 0       0

    vallarasu Tuesday, 05 March 2013 04:52 PM

    தம்பி இது சிங்கள தேசத்திற்கு மகுடம்டா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X