2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தில்ஷான் தொடர்பான செய்திக்கு சங்கக்கார மறுப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்தில் நடைபெற்ற ட்வெண்டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது, இலங்கை வீரர் திலகரட்ன தில்ஷான் இரவு விடுதியொன்றில் சூதாட்ட முகவர் ஒருவருடன் காணப்பட்டார் என்ற செய்தியை இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார மறுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் முதல் ஐ.சி.சியின் கண்காணிப்பிலுள்ளதாகக் கூறப்படும்  வீரர் திலரட்ன தில்ஷான் தான் என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் தில்ஹார பெர்னாண்டோவை சூதாட்ட முகவர் ஒருவர் அணுகியதாகவும் இது குறித்து ஐ.சி.சி ஒழுங்குவிதிகளின்படி உடனடியாக ஐ.சி.சி. அறிவிக்கப்பட்டதாகவும் இலங்கைக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆனால், தானோ அல்லது இலங்கைக்  கிரிக்கெட் சபையோ சக வீரர்கள் எவருக்கும் எதிராக புகார் எதையும் தெரிவிக்கவில்லை என குமார் சங்கக்கார சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தில்ஹார பெர்னாண்டோ தன்னை சூதாட்ட முகவர் ஒருவர் அணுகியமை குறித்து விதிகளைப் பின்பற்றி நடந்து, அதிகாரிகளை எச்சரித்தமைக்காக பாராட்டப்பட வேண்டும் எனவும் குமார் சங்கக்கார கூறினார்.

'வீரர்கள் தாம் சந்தேகப்படும் விடயங்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். வீரர்கள் அதற்குத் தயங்கக்கூடாது' என சங்கக்கார தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா எனக் கேட்டபோது 'எனது தரப்பில் தீவிர நடவடிக்கை தேவையில்லை எனக் கருதுகிறேன். ஆனால் கிரிக்கெட் சபையினரும் தில்ஷானும் தேவையெனக் கருதினால் அவர்கள் அதைச் செய்வார்கள'; என சங்கக்கார பதிலளித்துள்ளார்.

தில்ஷான் மீது இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தினார்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் எனக்குத் தெரியவில்லை. சிறப்பாக விளையாடி நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் எதுவும் என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அது கையாளப்பட வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.

'ஐ.பி.எல். போட்டிகளிலும் சந்தேகப்படும் படியாக எதுவும் இருக்கவில்லை. தில்ஷான் சிறந்த வீரர். அவர் பல போட்டிகளை எமக்கு வென்றுகொடுத்துள்ளார். இன்று காலையும் நான் அவருடன் பயற்சி செய்தேன். ஆனால் இவ்விடயம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. நாம் எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுலாவை வெற்றிகரமாக மேற்கொள்வது  குறித்தே கவனம் செலுத்துகிறோம்' என சங்கக்கார கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .