2025 மே 19, திங்கட்கிழமை

‘அரசமைப்பின் வரைவு ஆவணியில் வரும்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா. கிருஸ்ணா
புதிய அரசமைப்பின் வரைவு, எதிர்வரும் ஆவணி (ஓகஸ்ட்) மாதத்தில் வெளிவருமென எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.   

மட்டக்களப்பு நகரின் நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் நிலைமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அரசமைப்பு வரைவு வெளிவந்த பின்னர், மாவட்ட ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தேர்தல் முறைமை சம்பந்தமாக அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிகிறோம். அது, கலப்புமுறைத் தேர்தலாக இருக்கும்.

கலப்பு முறைத் தேர்தலாக இருந்தால், தொகுதிகள் அறிவிக்கப்படவேண்டும். அதற்குக் காலம் தேவைப்படலாம். தொகுதிகள் தீர்மானிக்கப்பட்ட பின்னர் தான் நடைபெறமுடியும். இருந்தாலும், மக்களைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு, நாங்கள் கேட்கிறோம்.  “புதிய அரசமைப்பினூடாக, மக்களுக்கு திருப்திகரமான தீர்வாக இருந்தால், அந்தத் தீர்வை பொறுப்பெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை, மாகாண சபைகளுக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.  
கிழக்கு மாகாணத்தின் ஆட்சி தொடர்பாகக் கேட்கப்பட்ட போது பதிலளித்த அவர், “அடுத்த இரண்டு வருடங்களுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமென, ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை” என்று தெரிவித்தார்.  

முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதால், தமிழர்கள் அடைந்து கொண்ட நன்மை என்ன என ஓர் ஊடகவிலாளர் கேட்டதற்கு, “எமக்கு இன்னும் ஓரிரு ஆசனங்கள் கிடைக்கெப் பெற்றிருந்தால், நாங்கள் ஆட்சியமைத்திருக்கலாம். ஆனால், சில குழறுபடிகள் காரணமாக, எங்களுக்கு அந்த ஆசனங்கள் கிடைக்கவில்லை.  

“இந்த விடயம் தொடர்பில், நாங்கள் பரிசீலிப்போம். நாங்கள், முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து பேசுவோம். எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் உறுதிப்படுத்த வேண்டியதும், எமது கடமை. ஆனால் ஒரு பகைமையை ஏற்படுத்தாத வகையில், இந்தக் கருமத்தை நிதானமாகச் செய்ய வேண்டும்.  

“எல்லோருக்கும் நீதியான தீர்வு கிடைக்க கூடிய வகையில் செய்ய வேண்டும்” என மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X