Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த, முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, தனக்கு எதுவுமே தெரியாது என்று, சாட்சியமளித்தார்.
திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் அமர்வில், நேற்று (02) ஆஜரான அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்த அமர்வுக்கு இரண்டு தடவைகள் அழைக்கப்பட்டபோதிலும், தன்னால் சமுகமளிக்கமுடியாமைக்காக, தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஆணைக்குழுவில் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், நேற்றைய (02) அமர்வுக்கு, தான் சமுகமளிக்கவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்திருந்தமையால், அளுத்கடை நீதிமன்ற வளாகம் மிகவும் பரபரப்பாகவே இருந்தது.
ஆணைக்குழுவின் அமர்வை அறிக்கையிடுவதற்காகச் சென்றிருந்த சகல ஊடகவியலாளர்களும், உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் அலைபேசிகள், மடிகணினிகள் உள்ளிட்ட ஏனைய இலத்திரனியல் உபகரணங்கள் யாவும், அங்கிருந்த பொலிஸாரால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டன.
விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், அவையாவும், உரியவர்களிடமே மீளவும் ஒப்படைக்கப்பட்டன. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நேற்றுக்காலை. 9:45 மணியளவில் ஆணைக்குழுவுக்கு வருகைதந்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், காலை 10:20 தொடக்கம், விசாரணைகளை ஆரம்பித்தார்.
பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியே ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்டன.
அலோசியஸ் குடும்பத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் இடையிலான தொடர்பு, 25 வருடங்கள் பழைமைவாய்ந்தது எனவும் அர்ஜுன் அலோசியஸை, 10 அல்லது 12 வருடங்களுக்கு முன்பிருந்தே தனக்குத் தெரியுமென, அமைச்சர் ரவி கருணாநாயக்க பதிலளித்தார்.
தன்னுடைய மகளும் அர்ஜுன் அலோசியஸின் மகளும் நண்பிகள் என்றும், ரவி கருணாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
அவ்விரண்டையும் தவிர, தனக்கும் அர்ஜுன் அலோசியஸுக்கும் இடையில் எவ்விதமான வர்த்தகரீதியான தொடர்பும் கிடையாது என்றும், அமைச்சர் ரவி பதிலளித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர், தான், தனது தனிப்பட்ட வர்த்தகத்திலிருந்து விலக்கிக்கொண்டதாகவும் அமைச்சர் ரவி கூறினார்.
“எது எவ்வாறாக இருப்பினும், அர்ஜுன் அலோசியஸ், இரண்டு தடவைகள் நிதியமைச்சுக்கு வந்துள்ளார் தானே?”, என சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலால் கேட்கப்பட்டபோது, அதனை அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறு வந்திருந்த போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தக ரீதியிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் எதிலும் ஈடுபடவில்லையென்றும் அமைச்சர் ரவி கூறினார்.
இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட அர்ஜுன் அலோசியஸின், அலைபேசி தரவுகள் உள்ளடங்கிய, 8,600 பக்கங்களைக் கொண்ட அறிக்கை, ஆணைக்குழுவுக்குக் கையளிக்கப்பட்டது.
“அர்ஜுன் அலோசியஸின் அலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் விசேடநிபுணர் கொண்டு, மீளவும் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அந்தத் தரவுகளும் இந்த அறிக்கையில் உள்ளது” எனக் குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், “அழிக்கப்பட்டு, மீளவும் எடுக்கப்பட்ட தரவுகளில், மிக முக்கியமான மற்றும் உணரக்கூடிய காரணங்கள் உள்ளன” என்றும் ஆணைக்குழுவுக்குச் சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர், அர்ஜுன் அலோசியஸின் அலைபேசிக்கு வந்த குறுந்தகவல்களில் சில தொடர்பிலான தகவல்கள் குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரிக்கப்பட்டது.
“சில, குறுந்தகவல்கள்களில் தங்களுடைய பெயரும் (ரவி கருணாநாயக்கவில்) உள்ளடக்கப்பட்டுள்ளனவே?” என்று வினவப்பட்டபோது, அவை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.
“சில குறுந்தகவல்களில் ‘Hon. PM’ (கௌரவ பிரதமர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஒரு குறுஞ்செய்தியில், ‘Get a copy from PM’ (பிரதமரிடமிருந்து நகலை பெற்றுக்கொள்ளவும்) என்றும் குறிப்பட்டுள்ளது” என்று, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், தன்மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனக்கு எதுவுமே தெரியாது என்றும், எந்தவொன்றிலும் தான் தொடர்புபடவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க, சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த போதெல்லாம் அர்ஜுன் அலோசியஸும் சிங்கப்பூரில் இருந்துள்ளார் என்றும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. ரவி கருணாநாயக்க, 13 தடவைகள் சிங்கப்பூருக்கு சென்றிருந்ததாகவும் அந்த 13 தடவைகளும் அர்ஜுன் அலோசியஸும் சிங்கப்பூரில் இருந்ததாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, “நான், சிங்கப்பூரில் இருந்தபோது, இரண்டொரு தடவைகள், அர்ஜுன் அலோசியஸைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். எனினும், அவை முன்னரே திட்டமிட்டதொன்றல்ல” என்றும் பதிலளித்தார்.
இதேவேளை, “தாங்கள் ஆட்சிபீடம் ஏறியது, நல்லாட்சியை உருவாக்குவதற்குதானே?” என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, “என்னை போன்ற அதிகாரமிக்க அமைச்சரை இவ்வாறு கேள்விகளைக் கேட்பதற்கு முடிந்தது. நல்லாட்சியினால் ஆகும்” என்றார்.
அர்ஜுன் அலோஸியஸின் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில், தான் வசித்தமை தனக்குத் தெரியாதெனத் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, தான் வாழ்ந்த வீட்டை பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட், குத்தகைக்குக் கொடுத்தது என்பதை, தான் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிந்திருந்தால் அங்கு வாழ்திருக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
தனது குடும்பத்தினர் வீட்டை வாடகைக்கு எடுத்தபடியால், கடந்த 9 மாதங்களாக தான் வாழ்ந்த வீடு பற்றிய விவரங்களை தான் தெரிந்திருக்கவில்லை எனவும் அனிக்கா வினோதினி விஜயசூரியவிடமிருந்து இந்த வீட்டை வாடகைக்கு எடுத்த நிறுவனத்துக்கு 12.5 மில்லியன் ரூபாயை வாடகையாக தனது குடும்பம் கொடுத்ததாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அனிக்கா வினோதினி விஜயசூரியவுக்கு, தனது வீட்டை அரசியல்வாதிகளுக்கு குத்தகைக்குக் கொடுக்க விருப்பமில்லை எனவும் தனது மகளின் நண்பனும் தனது முன்னாள் காதலனுமான அர்ஜுன் அலோசியஜுக்கு வாடகைக்குக் கொடுக்க விரும்பினார் என்றும் குறிப்பிட்டார்.
இந்த வீட்டை வாங்கியதை நிரூபிக்கக்கூடிய எந்த ஆவணமும் கருணாநாயக்கவின் கம்பனியான குளோபல் ரான்ஸ்போட்டேஸன் லொஜின்டிக் கம்பனியில் காணப்படவில்லை. அவரது குடும்பம் வீட்டு வாடகையைக் கொடுப்பதற்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது என வினவப்பட்டபோது, “நான் தெருப்பிச்சைக்காரன் அல்ல” என ரவி கருணாநாயக்க கூறினார்.
5 minute ago
17 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
26 minute ago
2 hours ago