Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 27 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தில், ஜனாதிபதி செயலகமும், அலரிமாளிகையும் எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கியதோ, அதேபோல, இந்தவாரமும் இவ்விரண்டும் சுறுசுறுப்பாகவே இயங்கின.
என்றாலும், பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாடுதிரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அதில் மிகவும் முக்கியமானதொன்றாக இருந்தது.
இவ்விருவரும், அறிவிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை தொடர்பிலேயே கலந்துரையாடியுள்ளனர். எனினும், அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர், புதிய அமைச்சரவையை அறிவிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், கட்சியின் மத்தியக் குழுவில் கலந்துரையாடவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார் என்றாலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன.
ஆகையால், அரச செயற்பாடுகள் யாவும் தாமதமடைந்துள்ளன என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூடிய விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.
அதுமட்டுமன்றி, புதிய அமைச்சரவையை அறிவிக்கும் போது, தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயதானங்களை, அறிவியல் ரீதியில் வர்த்தமானியில் பிரசுரிப்பது தொடர்பில், இருவரும் பொதுவான இணக்கப்பாட்டொன்றை இதன்போது எட்டியுள்ளனர் என அறியமுடிகின்றது.
அதன் பின்னரான இரண்டு நாட்களும், கட்சியை மறுசீரமைப்பு தொடர்பிலான யோசனைகள், ஆலோசனைகளை பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆகையால், அவ்விரு நாளும், நள்ளிரவு வரையிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையிலேயே இருந்துள்ளார்.
புதன்கிழமையன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி மறுசீரமைப்பு தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதன்போது, பிரதான பதவிகளுக்கான நியமனங்களுக்கு, அரசியற்குழு உறுப்பினர்களால் அனுமதியளிக்கப்பட்டது.
இந்த அரசியற்குழு கூட்டத்தில், இருதரப்பு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோரின் கருத்துகள் அக்கூட்டத்தை சூடாக்கிவிட்டன.
இது இவ்வாறிருக்க, கட்சியின் உப-தலைவர் பதவியை கோருமாறு, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு சிலர் அழுத்தம் கொடுத்துள்ளனர். அதனை நவீன் நிராகரித்துவிட்டாரென அறியமுடிகின்றது.
தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து அவர் சற்றும் தளராமல் இருந்தார் என்றும் கட்சியிலிருக்கும் மூத்த தலைவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென இதன்போது கூறியதாகவும் தகவல் தெரிவித்தது.
அதன்பின்னர், முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தாவில் சில மணித்தியாலங்கள் இருந்தார்.
அப்போது அங்கிருந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “அக்கிராசன உரையை தோல்வியடைய செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஊடகங்கள் சில, அறிக்கையிட்டுள்ளன.
இதன்போது குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “நாடாளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொள்கை விளக்க உரையொன்றையே ஆற்றவுள்ளார்.
அந்த உரையின் மீது வாக்கெடுப்பை நடத்துமாறு கோரமுடியாது. எனினும், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் மீது விவாதம் நடத்தவேண்டுமென, எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தால், இரண்டு நாளல்ல, மூன்று நாட்களை ஒதுக்கிகொடுக்கவும்” என தெரிவித்துவிட்டார்.
அவ்விடத்திலிருந்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, “ அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. அதுதொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூறுகின்ற கருத்துகளை, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டு, தூக்கிப் பிடித்துகொண்டு பிரசாரங்களை செய்கின்றன. எமது தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
“எரிபொருட்களின் விலையேற்றம், டொலரின் பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதென குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாடுகளில் சில நாடுகளுக்கு கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களும் இதற்கு பிரதான காரணமாக அமைந்துவிட்டன என்றும் தெரிவித்தார்.
குறுக்கிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, “ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார்.
“ஆமாம்… ஆமாம்… இரண்டு பிரதான கட்சிகளும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவிரைவாக முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி, என்னிடம் தெரிவித்தார். எவ்வாறெனினும், தேர்தலுக்குப் பின்னர், பிரதான கட்சிகள் இரண்டிலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
“இல்லை… இல்லை… சேர், ஜனாதிபதி அவர்கள், இராஜினாமாச் செய்த அமைச்சர்களின் பின்னால் ஓடாமல், ஏற்பட்ட வெற்றிடங்களை, இருக்கின்ற இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை கொண்டு, நிரப்பியிருக்கலாம். அவ்வாறில்லாமல் இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போவது, அவ்வளவுக்கு நல்லதல்ல” என அமைச்சர் வஜிர அபேவர்தன எடுத்தியம்பினார். அக்கருத்தை அங்கிருந்த சகலரும் ஆமோதித்தனர்.
அங்கிருந்த பிரதியமைச்சர் ஜே.சி. அலவதுவல, “ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென, ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது” என நினைவுபடுத்தினார்.
“இதுவரையிலும் அவ்வாறான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை, எனத்தெரிவித்த சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, இது எல்லோரையும் முட்டாளாகும் அறிவிப்பாகும் என்று கூறிவிட்டார். அப்போது, அங்கிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சகலரும் கெக்கென சிரித்துவிட்டனர்.
எனினும், கடுந்தொனியில் கருத்துரைத்த பிரதமர் ரணில், “ அரச ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில், ஒவ்வொரு நாளும் முறைபாடுகள் கிடைக்கின்றன. சில நிறுவனங்களின் தலைவர்கள், அந்த நிறுவனத்தில் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே இருக்கின்றனர். ஆகையால், அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கட்சியில் மறுசீரமைப்பை மேற்கொண்டதை போல, ஊடக நிறுவனங்களிலும் மேற்கொள்வேன்” என்றார்.
பிரதமரின் அந்த அறிவிப்புக்கு, அங்கிருந்தவர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
29 minute ago