Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 04 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. கமல்
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் 9 பேரும், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பான இராஜினாமா கடிதங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரை, உடன் பதவி விலகுமாறு, நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், நேற்று (03) காலை ஒன்றுகூடிய முஸ்லிம் பிரதிநிதிகள், தீர்க்கமானதொரு கலந்துரையாடலில் ஈடுபட்டு, இது தொடர்பில், பிரதமருக்கு அறிவித்தனர். இந்நிலையில், தாங்கள் விரும்பிய தீர்மானத்தை எடுக்குமாறு பிரதமர் அனுமதி வழங்கிய நிலையில், தாங்கள் தங்களுடைய அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக, அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில், அலரி மாளிகையில் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஹக்கீம், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை காரணமாகவும் தங்களது முஸ்லிம் சமூதாயத்துக்குப் பாதுகாப்பற்ற நிலைமையொன்று காணப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தாலும் புலனாய்வுப் பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும், தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.
அத்தோடு, அரசாங்கத்தாலும் புலனாய்வுப் பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளை அடுத்துத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கத்துக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குவதாகவும், அவர் கூறினார்.
நாடு ஒரு அபாயாமான நிலையில் இருப்பதை, அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் எனவேதான், இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறிய அவர், அரசாங்க மட்டத்தில் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூதாயத்துக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை என்பதை, தாம் உணர்ந்துள்ளதாகவும், அவர் கூறினார்.
நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு உதவியவர்கள், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் என, அனைவரும் தேடியறியப்பட்டு, அவர்களுக்கான தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்றுக் கூறிய அவர், இவ்வாறு இனவாதச் சக்திகளையும் வன்முறைகளைத் தூண்டுவோரையும் கண்டு, தாங்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த அச்சநிலையிலிருந்து இந்த நாடு மீளவேண்டும் என்றும் நாட்டிலுள்ள மக்களுக்கிடையில் நல்லிணக்கம் மீண்டும் உருவாகவேண்டும் என்றும் அவர் தெரிவித்ததோடு, நாட்டின் நன்மதிப்பு பாதிக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.
இதேவேளை, தங்களிலுள்ள ஒரு சிலர் மீது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, தாங்கள் அனைவரும் இடங்கொடுத்து உள்ளதாகவும் இதன் மூலம், அரசியல் தலைவர்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்றும், அவர் கூறினார்.
அத்தோடு, தற்போது இடம்பெற்றுவரும் புனித ரமழான் மாத்தில், சிறு சிறு குற்றங்களுக்காகப் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து, அரசாங்கம் கவனஞ்செலுத்தி, தவறு செய்யாதவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஹக்கீம் கோரினார். (படப்பிடிப்பு; நிமலசிறி எதிரிசிங்க)
நாட்டுக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதத்துக்குத் துணைபோனவர்கள், அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் என எவராக இருந்தாலும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தக்க தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், தங்களில் ஒருவர், பயங்கரவாதத்துக்குத் துணை போயுள்ளார் என்பது கண்டறியப்பட்டாலும்கூட, அவர் நிச்சயமாக தண்டிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இனிமேலும், முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாகி விடக்கூடாது என்றும் இந்த நிலையை, இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிய ரவூப் ஹக்கீம், எனவேதான், முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த முடிவை எடுத்ததாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, அரசாங்கத்துக்கு 1 மாதகால அவசாகம் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025