2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

Janu   / 2026 ஜனவரி 01 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொஹரா புஹாரிக்கு ஒரு வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.நிசாம் காரியப்பரினால் அனுப்பிவைக்கப்பட்டு கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சியின் ஓர் அங்கமாக, மேற்கொள்ளப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதென்ற தெளிவான முடிவை மீறி, அதற்கு  ஆதரவாக நீங்கள் வாக்களித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதுபற்றி ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரஸ்தாப வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கும் முடிவை நீங்களும் கலந்து கொண்ட குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார் என்பதை குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தக் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டு, கட்சியின் நிலைப்பாட்டை முழுமையாக அறிந்திருந்தும் கூட, கட்சித் தலைமையின் வெளிப்படையான அறிவுறுத்தல்களை நீங்கள் நேரடியாக மீறிச் செயல்பட்டுள்ளீர்கள்.

உங்கள் நடத்தை கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைக்  கடுமையான மீறும் செயலாகும், மேலும் இது எங்களால் மிகவும் கவலையுடன் நோக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், உங்களைக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்துமாறும், உங்கள் கட்சி உறுப்பினர் பதவி நீக்கம் உட்பட, உங்கள் மீது ஏன் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு,விளக்கமளிக்குமாறும் உங்களுக்கு  அறிவிக்கும்படி, எமது கட்சியின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னை  அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி, ஒரு சத்தியக் கடதாசி  மூலம் உங்கள் விளக்கத்தைச் சமர்ப்பிக்குமாறும் மேலும் உங்களுக்கு அறியப்படுத்துகின்றேன்.

இந்தக் கடிதம் கிடைத்த நாளிலிருந்து ஒரு (01) வாரத்திற்குள் அத்தகைய சத்தியக் கடதாசி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அதற்கு உடன்படாது விட்டால், அறிவிப்பு இல்லாமல், உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X