2025 மே 15, வியாழக்கிழமை

ஜனாதிபதி தேர்தல்: ‘நானும் காத்திருக்கிறேன்’

Editorial   / 2019 ஜூன் 01 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கு, எந்தவோர் அரசியல் கட்சியும் இதுவரை தமது கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்யவில்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  ஆகையால் எனக்கு எவ்வித அவசரமும் இல்லாததால் ஏனைய கட்சிகள் தமது வேட்பாளரை தெரிவு செய்யும் வரை நானும் ஒரு முடிவுக்கு வராது காத்திருக்கின்றேன் எனவும் கூறினார்.

இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் போட்டியிட போகின்றீர்களா? அத்தோடு பிம்ஸ்டெக் அமைப்பின் எதிர்காலமும் குறிப்பாக சார்க் அமைப்புடன் அதன் செயற்பாடுகளும் எவ்வாறு அமையும்?

இவ்வருட இறுதியில் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதியே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கின்றது. ஏற்கெனவே இலங்கை தேர்தல் ஆணைக்குழு அவ்வாறு அறிவித்திருக்கின்றது. ஆகையால் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது என்பதால் எதிர்கட்சியோ ஆளுங்கட்சியோ எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை தமது கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. ஆகையால் எனக்கு எவ்வித அவசரமும் இல்லாததால் ஏனைய கட்சிகள் தமது வேட்பாளரை தெரிவு செய்யும் வரை நானும் ஒரு முடிவுக்கு வராது காத்திருக்கின்றேன்.

சார்க் மற்றும் பிம்ஸ்டெக் அமைப்புகளைப் பற்றியும் நீங்கள் வினவினீர்கள். இவ்விரு அமைப்புகளுமே மிக முக்கியமானவை. பிராந்திய ரீதியிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ நாடுகள் பல்வேறு துறைகளில் அமைப்புக்களை உருவாக்குவது முக்கியமான விடயமாகும். காரணம் அவ்வாறான அமைப்புக்களுக்குள் உள்வாங்கப்படுவதன் மூலமே இருதரப்பு உறவுகள் பலமடைகின்றன. அதேபோல் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளும் பலம் பெறுகின்றன. பிராந்திய நாடுகளுக்கிடையில் அந்நியோன்ய நல்லெண்ணமும் நட்புறவும் அதிகரிக்க வழிவகுக்கின்றன. ஆகையால் இன்றைய அதிதொழிநுட்பத்துடன் சர்வதேச ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் பற்றி பார்க்கின்றபோது நாடுகளை உள்வாங்கும் அமைப்புக்கள் கூட்டுறவுகள் மற்றும் நட்புறவுகள் பலப்படுத்தப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகவே நான் உணர்கின்றேன்.

கேள்வி - இந்திய பிரதமர், இலங்கை விஜயத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கின்றாரா? அத்தோடு, உங்களது நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்முறை தலைதூக்குவது ஒரு பிரச்சினையாக அமையாது என நீங்கள் நினைக்கின்றீர்களா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாலைத்தீவு சுற்றுப் பயணத்தையடுத்து, இலங்கைக்கும் விஜயம் செய்வதாக தெரிவித்திருக்கின்றார். அவரது இலங்கை விஜயம் மிக முக்கியமானதாகும். ஒருபுறத்தில் நாம் நேச நாடுகள். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. ஆகையால் நாம் அவரை உயரிய பாசத்துடன் வரவேற்கின்றோம். அவரது வருகை இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கின்றது.

அடுத்ததாக, ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று வாரங்களுக்குள் நாட்டை நான் முழுமையான அமைதி நிலவும் நாடாக மாற்றியிருக்கின்றேன். எமது நாட்டின் புலனாய்வுப் பிரிவும் பாதுகாப்பு துறையும் ஏற்பட்ட நிலைமையை மிக நேர்த்தியாக கையாண்டது. அதனால் இன்று நாடு உச்சக்கட்ட அமைதியை எட்டியிருப்பதுடன், நாடு இயல்புநிலைக்கு திரும்பியிருக்கின்றது. இதனால் இப்போது நாட்டுக்குள் உல்லாசப் பயணிகள் வர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அத்தோடு, எமது நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்வது தொடர்பில் சில நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த தடைகளும் இப்போது நீக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் இப்போது நாட்டின் அமைதி உறுதி செய்யப்பட்டிருப்பதால் இந்திய பிரதமரின் வருகைக்கு நாம் தயாராக இருக்கின்றோம். நாட்டின் நிலைமை மிகவும் நன்றாக இருக்கின்றது. இப்போது எந்த பிரச்சினையும் இல்லை.

கேள்வி - இந்தியா, ஜப்பான், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறைக்காக ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகின்றது. அதையிட்டு அரசியல் ரீதியிலான கருத்து மோதல் ஏற்பட்டிருக்கின்றதா?

இந்தியா, ஜப்பான், இலங்கைக்கிடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையின் அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொள்ளவிருக்கின்ற ஒப்பந்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பூர்வாங்க புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.

ஆனால் அது ஒப்பந்தம் அல்ல. ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கான உடன்படிக்கையாகும். அது இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் உபயோகத்தில் கொள்ளுதல் பற்றியதாகும். இதன்போது ஏற்படுகின்ற கலந்துரையாடல் மூன்று நாடுகளுக்கும் மிக முக்கியமானவையாகும். இலங்கைக்கு பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் நன்மை பயக்கின்ற வகையில் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி – 21ஆம் திகதி தாக்குதலைப் பற்றி தகவல் கிடைத்திருந்ததாக கூறப்படுகின்றது. அத்தோடு அதைப்பற்றி அறிந்திருப்பின் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பேன் என நீங்களும் கூறியிருக்கின்றீர்கள். உண்மையில் நடந்தது என்ன?

குறிப்பாக கொழும்பு நகரம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியே மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் இடம்பெற்ற வேளையில் நான் சிங்கப்பூரிலேயே இருந்தேன். இத்தகையதோர் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்ற தகவலை இந்திய அரசு இலங்கையின் அரச புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருக்கின்றது. அத்தகையதொரு தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறும் அறிக்கையும் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஏப்ரல் மாதம் 04ஆம் திகதியே இந்திய அரச தரப்பு இதனை அறிவித்திருக்கின்றது. அதன் பின்னர் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரிகளுக்கிடையில் அத்தகவல் பரிமாறப்பட்டிருக்கின்றன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையில் கடிதம் மூலம் இத்தகவல் பரிமாறப்பட்டிருக்கின்றது. நான் இலங்கையை விட்டு வெளியேறியது ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி. ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நான் இலங்கையில் இருந்த 12 நாள்களில் இத்தகவல் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருந்தன. இருந்தும் எந்தவொரு பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இத்தகையதோர் தகவல் கிடைத்திருப்பதாக எனக்கு அறியத்தரவில்லை. அப்படி அறியத்தந்திருப்பின் நான் நாட்டைவிட்டு வெளியேறியிருக்க மாட்டேன்.

அத்தோடு, தகவல் அறிந்திருப்பின் இத்தாக்குதலை தடுத்திருப்பேன். எமது பாதுகாப்பு துறை பிரதானிகள் ஒரு பாரிய தவறை புரிந்திருக்கின்றார்கள். ஆகையால் தான் பாதுகாப்பு செயலாளரையும் பொலிஸ்மா அதிபரையும் அப்பதவிகளிலிருந்து விலக்கினேன். அத்தோடு இச்சம்பவம் நடந்த விதத்தையும் எமது பாதுகாப்பு தரப்பின் ஏதேனும் குறைபாடுகள் இருந்திருப்பின் அவற்றைக் கண்டறிவதற்கும் உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை ஏப்ரல் 22ஆம் திகதியே நியமித்தேன்.

அவ்வறிக்கைக்கமைய தவறுகள் இழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகையதோர் தாக்குதலைப் பற்றி நான் அறிந்திருப்பின் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட நான் இடங்கொடுத்திருக்க மாட்டேன். பாதுகாப்பு துறைகளை சிறந்த முறையில் இயங்க வைத்திருப்பேன்.

கேள்வி - இப்போது பயங்கரவாத அமைப்பு மற்றும் இஸ்லாமிய கடும்போக்கு ஆகியன இலங்கைக்கும் பிராந்தியத்துக்கும் சவாலாக மாறியுள்ளன. இதனை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

பயங்கரவாதம் என்பது பல விதங்களில் உலகெங்கும் இருந்து வருகின்றது. உள்நாட்டு பயங்கரவாதங்களும் இருக்கவே செய்கின்றது. எமது நாட்டிலும் 30 வருடகால பயங்கரவாத யுத்தம் இடம்பெற்றது. அது முடிவுக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளாக நாடு அமைதியாகவே இருந்துவந்தது. இந்த உலகில் அரசியல் கடும்போக்காளர்;களும் மதக் கடும்போக்காளர்களுமே பயங்கரவாதத்தை உருவாக்குகின்றார்கள். இச் சர்வதேச பயங்கரவாதம் எவ்விதத்தில் செயற்பட்ட போதிலும் அது எல்லா உலக நாடுகளுக்கும் சவாலாகவே அமைகின்றது. அதிலும் பலசாலிகளான நாடுகள் மீதே இப்பயங்கரவாதிகள் பெரும்பாலும் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

எமது நாட்டில் இப்பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புகள் என மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அது எந்த நாட்டுக்கு எதிராக செயற்பட்டாலும் அது சவாலாகவும் பிரச்சினையாகவுமே அமைகின்றது. ஆகையால் பயங்கரவாதத்தை எதிர்க்க உலகின் சகல ஜனநாயக நாடுகளும் ஒன்றுபட வேண்டும். அந்த நாடுகள் பலசாலிகளாவோ சிறிய நாடுகளாகவோ இருக்கலாம்.

இருப்பினும் அந்த நாடுகள் ஒன்றிணைவதன் மூலமே பயங்கரவாதத்தினை தோற்கடிக்க முடியும். இப்பயங்கரவாதிகளின் நோக்கம் நாடுகளை சிதைப்பது, பிரிப்பது, நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையிலும் பகைமையை ஏற்படுத்துவதேயாகும். எவ்வாறாயினும் தற்போது இலங்கையில் பயங்கரவாத செயற்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தியிருக்கின்றோம். பயங்கவாதத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதுடன், நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கேள்வி – சார்க் மற்றும் பிம்ஸ்டெக் அமைப்புகளின் முக்கியத்துவத்தை ஏற்கனவே நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள். அந்த வகையில் சார்க் அமைப்பை மீண்டும் செயற்படுத்த வேண்டும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா?

இந்த இரு அமைப்புக்களுமே மிக முக்கியமானவை. ஆகையால் அவற்றைப் பலப்படுத்த வேண்டியது உறுப்பு நாடுகளின் பொறுப்பாகும். நல்ல நோக்கத்துடனும் நல்ல கருப்பொருளுடனும் செயற்படுத்தப்படும் எந்த செயலிலும் நற்பலன்களே கிடைக்கும் ஆகையால் இவ்விரு அமைப்புக்களையும் செயற்படுத்த வேண்டும்.

கேள்வி – ஞானசார தேரர் அவர்களை விடுதலை செய்ததாக அறிகிறோம். இவர் உக்கிரமான வலதுசாரி கருத்துக்களைக் கொண்டவர். அதனால் பலர் இவரை விடுதலை செய்ததை விமர்சிக்கின்றார்கள். என்ன நடந்தது? எப்படி விடுவித்தீர்கள்?

ஞானசார தேரர் என்பவர் ஒரு பௌத்த பிக்கு. குறிப்பாக அவரை விடுதலை செய்யும்படி சிங்கள பௌத்த தலைவர்களும் மகாநாயக்க தேரர்களும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்கள். அத்தோடு, முஸ்லிம் மதத் தலைவர்களிடமும் மௌலவிமார்களிடமும் ஞானசார தேரரை விடுதலை செய்வதைப் பற்றி அவர்களின் கருத்தை வினவிய போது அவர்களும் அத்தேரரை விடுதலை செய்வதை எதிர்க்கவில்லை என்பதை என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கமையவே அத்தேரரை விடுதலை செய்தேன்.

அத்தோடு தனிப்பட்ட ரீதியிலும் நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்படும்படியும் அப்படி நடந்துகொள்ளாவிட்டால் மீண்டும் அவரை கைதுசெய்ய நேரிடும் என்பதையும் அவரிடம் நான் அறிவுறுத்தியிருக்கின்றேன்.

இவரின் விடுதலை மோதல்களுக்கு வழிவகுகக்கூடும் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். ஆயினும் மோதல்களைத் தவிர்த்து சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலைப் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை அரச பாதுகாப்பு துறையும் புலனாய்வுத் துறையும் இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், அவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தோடு எமது நட்பு நாடுகளின் புலனாய்வுத் துறைகளும் இவ்;விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய பலமிக்க பல நாடுகளும் முன்வந்து இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கின.

அந்த விசாரணைகளின் முடிவுகள் அத்தாக்குதல் பயங்கரவாத அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. அத்தோடு இது சர்வதேச பயங்கரவாத அமைப்பினால் நெறிப்படுத்தப்பட்ட தாக்குதலாகுமென புலனாய்வு விசாரணை அமைப்புகள் கூறுகின்றன.

இத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத அமைப்பினர் உலகின் வேறு நாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு இத்தாக்குதலின் பின்னர் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர்கள் இத்தாக்குதலுக்கு உரிமைக்கோரியிருக்கின்றார்கள். அத்தோடு சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தாக்குதல் நடத்திய அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு  பிரிவு உறுதிப்படுத்தியிருக்கின்றது.

கேள்வி – பயிற்சிக்காக இந்த பயங்கரவாதிகள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றிருக்கின்றார்கள்?

எந்தெந்த நாடுகளில் பயிற்சி பெற்றார்கள் என்ற விடயத்தை இதுவரை புலனாய்வு பிரிவு துல்லியமாக கூறவில்லை. ஆயினும் வெளிநாட்டுப் பயிற்சியைப் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

கேள்வி – இலங்கையை சேர்ந்த இவர்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவி கிடைத்திருக்கின்றதா?

இந்த அமைப்புடன் சம்பந்தப்பட்ட தற்கொலைதாரிகள் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் உயரிய பொருளாதார பின்னணியைக் கொண்ட பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்களாவர். அத்தோடு தற்கொலை தாக்குதலைப் புரிந்த இளைஞர்கள் உயர்கல்வியையும் பெற்றிருக்கின்றனர். அவர்களுள் கலாநிதி பட்டம் பெற்றவர்களும் இருக்கின்றனர்.

ஆகையால் இந்த அமைப்பிற்கு தேவையான நிதியை உள்நாட்டிலேயே திரட்டியிருப்பதாகவே புலனாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெற்றதற்கான தகவல்கள் எதுவும் இதுவரை தெரிய வரவில்லை. எதிர்கால விசாரணைகளின் போது அவ்விடயங்கள் வெளிச்சத்திற்கு வருமா என்பது பற்றி இப்போதே கூறுவது கடினமாகும்.

கேள்வி – அப்பயங்கரவாதிகள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்திருந்ததாக அறியக்கிடைத்ததா? அவர்களது தொடர்புகளைப் பற்றி அறியக்கிடைத்திருந்ததா?

தாக்குதல்தாரிகள் இந்தியாவிற்கும் வந்திருப்பதாக ஒரு உத்தியோகத்தர் கூறியிருக்கின்றாராம். இப்பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு வந்திருப்பதாக எனக்கு அறியக்கிடைக்கவில்லை. அப்படியான ஒரு தொடர்பைப் பற்றி எனது பாதுகாப்பு பிரிவு என்னிடம் தெரிவிக்கவும் இல்லை.

கேள்வி – இலங்கையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது? இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் ஒரு தாக்குதல் இடம்பெற்றது. ஆயினும் அத்தாக்குதல் பற்றிய உங்களது அறிக்கை எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

அரசாங்கம் என்ற வகையில் அவர்கள் அனைவரது பாதுகாப்பையும் நாம் உறுதி செய்திருக்கின்றோம். எதாவது ஒரு இனத்துக்காகவோ மதத்துக்காகவோ இன்னுமொரு இனத்தையோ மதத்தையோ துன்புறுத்துவதை நாம் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதுமில்லை. இந்தியாவைப் போன்று எமது நாடும் ஒரு ஜனநாயக நாடாகும். ஆகையால், எனது நாட்டின் அனைத்து மக்களுக்கும் தனிமனித சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அந்த அனைத்து குடிமக்களினதும் தற்பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. அதனால் இங்கு ஒரு இனத்தை அல்லது மதத்தைப் பற்றிய பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கும் முழுப் பொறுப்பும் பாதுகாப்பு தரப்புகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி – தமிழ் இனவாதம் மீண்டும் வடக்கில் தலைதூக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா?

எமது நாட்டில், பயங்கரவாதம் 28 ஆண்டுகளாக இருந்து வந்தது. அதனை இன்று நாம் அடக்கியிருக்கின்றோம். அதனால் நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடிந்திருக்கின்றது. எமது அந்த முயற்சிக்கு உலகின் பல நாடுகளினதும் ஒத்துழைப்பு கிடைத்திருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் நானும் பயங்கரவாதிகளின் ஐந்து தாக்ககுதல்களை சந்தித்திருக்கின்றேன். என் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்ற அனைவரும் தம்மைதாமே மாய்த்துக்கொண்டுள்ளார்கள். என்னைக் கொலை செய்வதற்கு வந்த ஒரு கொலையாளி சட்டத்துக்கு முன் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

அந்த கொலை குற்றவாளிக்கும் நான் விடுதலையைப் பெற்றுக்கொடுத்தேன். அந்த நபர் இப்போது அவரது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றார். ஆகையால் நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கின்ற பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்காது. அப்படி தலைதூக்குவதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம்.

கேள்வி – இந்திய பிரதமர் எப்போது வரவிருக்கின்றார்? எத்தனை நாட்கள் தங்கிருக்கப் போகின்றார்? அவரது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்ன? அத்தோடு சீனா இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பிரதமர் மோடி, தனது மாலைத்தீவு விஜயத்தின் போதே இலங்கைக்கும் விஜயம் செய்யவிருக்கின்றார். ஏதிர்வரும் 09ஆம் திகதியே அவர் இலங்கைக்கும் விஜயம் செய்வதாக கூறியிருக்கின்றார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பது பொருளாதார மற்றும் வர்த்தக உறவேயாகும். ஆகையால் பொருளாதார, வர்த்தக தொடர்புகளுக்குள் வேறொரு நாட்டின் வேறு விடயங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு இங்கே இல்லை. ஆகையால் இலங்கை அரசு இந்த விடயத்தில் பொறுப்புமிக்க வகையில் நடந்துகொள்ளும்.

கேள்வி - இலங்கை பிரதமர் சமீபத்தில் பயங்கரவாதம் பற்றிய விசாரணைகளுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவையாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது பற்றி நீங்கள் இந்திய பிரதமருடன் கலந்துரையாடினீர்களா? சார்க் அமைப்பின் வளர்ச்சிக்கு பாகிஸ்தானின் நடத்தையே பெரும் தடையாக இருந்து வருகின்றது. இந்த அமைப்பில் இலங்கையின் பாத்திரம் எவ்வாறானதாக அமையும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பிரதமர் மோடியும் எனக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக உறவுகளை பலப்படுத்திக் கொள்வது எவ்வாறு என கலந்துரையாடப்பட்டது. அதைத்தவிர நீங்கள் இங்கே கூறிய விடயங்கள் பற்றி இங்கே கலந்துரையாடப்படவில்லை. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது நடுநிலைக் கொள்கையாகவே இருக்கின்றது.

அதன் மூலம் உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியில் செயற்படுவதே எமது கொள்கையாகும். அனைத்து நாடுகளையும் எமது நட்பு நாடுகளாகவே நாம் கருதுகின்றோம். அத்தோடு ஏதேனுமொரு இடத்தில் ஏதேனுமொரு பிரச்சினை ஏற்படும் போது அந்த நடுநிலைக் கொள்கைக்கேற்பவே நாங்கள் செயற்படுகின்றோம்.

கேள்வி - உங்களது நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்ற பிரசேதங்களில் அதிகாரப் பகிர்வு விடயம் மந்தகதியாக இருப்பதற்கு காரணம் என்ன?

எமது அரசியல் யாப்பிற்கு அமைய 1987ஆம் ஆண்டிலிருந்தே நாம் அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கமைய அரசியலமைப்பின் 13ஆவது சீர்திருத்தத்தின் மூலம் பெருமளவு அதிகாரங்களை பகிர்ந்தளித்திருக்கின்றோம். ஆகையால் தற்போது தேவைப்படுவது இன்னும் மேலதிக அதிகாரங்களைப் பகிர்வதை விட 13வது சீர்திருத்தத்துக்கு அமைவாக உரிய முறையில் செயற்படுத்துவதே ஆகும்.

காரணம், வடக்கிலும் தெற்கிலும் சாதாரண மக்களின் கோரிக்கையாக தமக்கு சிறந்ததோர் பொருளாதார நிலைமையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே இருந்து வருகின்றது. ஆகையால் இங்கே நீங்கள் சுட்டிக் காட்டிய நிலைமை எமது நாட்டில் இருப்பதாக நான் உணரவில்லை.

கேள்வி -  ஜனாதிபதி அவர்களே! உங்களது பாதுகாப்பு பிரதானிகள் இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை உங்களுக்கு அறியத்தரவில்லை எனக் கூறினீர்கள். அதற்கான காரணம் என்ன? குறிப்பாக கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் உள்நாட்டு அரசியலில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையே அதற்குக் காரணமாக அமைந்ததா?

இங்கே இருக்கின்ற முக்கிய பிரச்சினை தத்தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாமையே ஆகும். அவர்கள் மிகவும் மோசமான நிலையிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள். அதைத்தவிர எந்தவொரு பிரச்சினையும் இங்கே இல்லை. ஆகையினாலேயே நான் அவர்களை பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றேன்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .