2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எப்போது நீக்குவீர்கள்?

Niroshini   / 2018 மார்ச் 21 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லையென குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், ஐ.நாவுக்கு வாக்குறுதியளித்ததன் பிரகாரம், பங்கரவாதத் தடைச்சட்டத்தை எப்போது நீக்குவீர்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இலங்கையில் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, மனித உரிமைகளைக் காக்கும் வகையில் சர்வதேசத் தரத்திலான சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டு உறுதியளித்தது. ஆனால், அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“பிழையான இந்தச் சட்டத்தால் தமிழ் இளைஞர்கள் பலர் சிறைகளில் இன்றும் வாடுகின்றனர். எனவே, பயங்கரவாதத் தடைச்சட்டம் எப்போது நீக்கப்படுமென்பதை நீதியமைச்சு அறிவிக்கவேண்டும். அந்தச் சட்டத்தின் விளைவு கொடூரமானது.

“கிளிநொச்சியில் கடந்த ஞாயிறன்று மனதை நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவமொன்று நடைபெற்றது.

“2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் என்ற அரசியல் கைதிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்துக்குள்ளான அவரின் மனைவி, கடந்த 18ஆம் திகதி இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு கணவரான சுதாகரனுக்கு 3 மணிநேரமே வழங்கப்பட்டது.

“இறுதிக்கிரியைகளில் பங்கேற்றுவிட்டு சுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும்போது அவரின் மகளும் அதில் ஏறிவிட்டார். இந்தக்காட்சியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சுதாகரனுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்போது தாயும் இல்லை. தந்தையும் சிறையில். அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

“இந்நிலையில், நீதித்துத் துறை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. இதை அகற்றாமல் இருப்பதற்கும், இதை நீக்குவதற்கு கால தாமதப்படுத்துவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

“ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதற்கான காரணம் என்ன?” என்றும் அவர் வினவினார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .