பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காகப் பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலன் மற்றும் அண்மையில் ஓய்வுபெற்றுச்சென்ற 5 முன்னாள் உரைபெயர்ப்பாளர்களை பாராட்டும் நிகழ்வு அண்மையில் (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்ற சேவைக்காலத்தில் ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்றத்தின் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் உயர்ந்த கௌரவ விருது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன், அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பிரதான உரைபெயர்ப்பாளர்களான கே.எம். கிறிஸ்டோபர், ஐ.டி.எல். ரத்னசீலி, முன்னாள் சிரேஷ்ட உரைபெயர்ப்பாளர்களான எஸ்.ஆர்.எம். நிஸாம், எச்.வீ.எஸ். ஹீந்தெனிய மற்றும் சுனில் விஜேசிங்க ஆகியோருக்கும் இதன்போது கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளர் எம்.கே. ராகுலன் இந்நாட்டின் பாராளுமன்ற உரைபெயர்ப்பு வரலாற்றில் அழிக்கமுடியாத அடையாளத்தை பதித்துள்ளார் எனக் குறிப்பிட்டார். அத்துடன், ஏனைய பாராட்டுக்களைப் பெற்றவர்களும் இலங்கை பாராளுமன்றத்துக்காக பல தசாப்தங்களாக ஆற்றிய பணிகள் தொடர்பில் செயலாளர் நாயகம் பாராட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் உரைபெயர்ப்பாளர்கள் தமது பாராளுமன்ற சேவையின் போதான மகிழ்ச்சியான மற்றும் சவால்மிக்க அனுபவங்களை நினைவுகூர்ந்தனர்.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, பாராளுமன்ற பிரதான உரைபெயர்ப்பாளர் சீ.ஜே. கருணாரத்ன ஆகியோரும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்களும் பாராளுமன்றப் பணியாளர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.