
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204 வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மனாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் வெள்ளிக்கிழமை (21) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெற்று ஏழு அடுக்கு மினராவில் கொடியேற்றி வைக்கப்பட்டது.
இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி ராத்திப் மஜ்லீஸ், ஜியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விசேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றதோடு. இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடி இறக்கும் நிகழ்வும் இடம்பெறும்.
மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் கந்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கொடியேற்றும் இந் நிகழ்வில் , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, முஸ்லிம் கலாச்சார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம் பிர்னாஸ், பொத்துவில் தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாராப், கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,முன்னாள் உறுப்பினர் ஏ.எம் ரியாஸ்(பெஸ்டர்), கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ் அமீர் அலி,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம் மஜீட்,நிர்வாக உத்தியோகத்தர் ஏ,சி.எம் பழீல் கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப்பின் செயலாளர் எம்.எச்.எம் முபாரிஸ்,பொருளாளர் எம்.ரிப்னாஸ் உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், மற்றும் கல்முனை தரவை கோவில் ஆலய நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுத்தா உமர்


