2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

பண்ணையாளர்களுக்கு விடுதலை கோரி கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை எல்லைப் பகுதியில் தமது கால்நடைகளை தேடிச் சென்ற 6 பண்ணையாளர்களை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த விவசாயிகளால், மறைவானதோர் இடத்துக்குக் கடத்திச் சென்று தாக்கியதுடன், மாகோயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தமைக்கு நியாயம் வேண்டியும், தமது பூர்வீகக் காணியை மீட்டுத்தருமாறு கோரியும் அப்பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம், இன்று (10) மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு, சித்தாண்டி பிரதான வீதியின் அருகாமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கால்நடை பண்ணையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “அரசே இன அழிப்பை மேற்கொள்ளாதே”, “மேய்சல் தரையை உறுதிப்படுத்து”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “மகாவலி என்ற போர்வையில் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்காதே”, “பண்ணையாளர்கள் எம்மினத்தின் முதுகெலும்பு” என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இதன்போது போராட்ட இடத்துக்கு வருகை தந்த கரடியானாறு பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடத்தப்பட்டவர்கள், மாகோயா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர் எனவும் நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன், இச்செயலை விளைவித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர்களும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். 

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .