2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆண்டின் சிறந்த வீரராக ஹேரத்

Editorial   / 2017 நவம்பர் 02 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பத்ரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜில் நேற்று முன்தினம் இடம்பெற்ற டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் இவ்வாண்டின் சிறந்த வீரராக ரங்கன ஹேரத் தெரிவாகியுள்ளார். ஆண்டின் சிறந்த வீரர் தவிர டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராகவும் ரங்கன ஹேரத்தே தெரிவாகியிருந்தார்.

ஆண்டின் சிறந்த வீராங்கனையாக சாமரி அத்தப்பத்து தெரிவானார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாகவும் சாமரி அத்தபத்துவே தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, கடந்தாண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஜூன் வரையான காலப்பகுதியிலான பெறுபேறுகளே இந்த விருதுகளுக்காக கருத்திற் கொள்ளப்பட்டிருந்த நிலையில், இக்காலப் பகுதியில் சகலதுறையிலும் பிரகாசித்து இலங்கைக்கு எதிர்பாராத வெற்றிகளை வழங்கிய அசேல குணரட்ன, ஆண்டின் சிறந்த நம்பிக்கையளிக்கும் வீரராகவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சிறந்த சகலதுறை வீரராக தெரிவானார்.

கடந்தாண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த தனஞ்சய டி சில்வா, டெஸ்ட் போட்டிகளில், ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராகத் தெரிவானார். தனது பந்துவீச்சுக்கு மேலாக இலங்கையின் அண்மைய டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்த டில்ருவான் பெரேரா, டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரராகத் தெரிவானார்.

இந்நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, ஒருநாள் சர்வதேசப் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று வகையான போட்டிகளிலும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிரோஷன் டிக்வெல்ல, ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராகத் தெரிவாகியிருந்தார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக குசல் மென்டிஸ் தெரிவானதோடு, ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக சுரங்க லக்மால் தெரிவாகியிருந்தார்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில், ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மலிங்க தெரிவாகினார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், பெண்களில் ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக இனோகா றணவீரவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக சுகந்திகா குமாரி தெரிவானார்.

இதேவேளை ஆண்டின் சிறந்த சர்வதேச நடுவராக குமார் தர்மசேன தெரிவானதோடு, வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நீல் பெரேராவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லி மிரரின் சம்பிக பெர்ணான்டோ ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் இந்திய அணியின் முன்னாள் தலைவரான கபில்தேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண் மற்றும் ஆண்களுக்கான உள்ளூர், சர்வதேசப் போட்டிகளில் குறைந்தது 60 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .