2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்தில் உலகக் கிண்ணம்?

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, 2030ஆம் ஆண்டில் தமது நாட்டில் நடத்துவது குறித்த சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து வருவதாக, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலமாக, அவ்வுலகக் கிண்ணத்தை நடத்துவதற்கு முயலவுள்ள, ஒரேயோர் ஐரோப்பிய நாடாக, இங்கிலாந்து மாறவுள்ளது.

பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் மூலமாக, உலக அரங்கில் முக்கியமான கால்பந்தாட்ட நாடாகக் காணப்படும் இங்கிலாந்து, தாம் நடத்திய ஒரேயோர் உலகக் கிண்ணத் தொடரான 1966ஆம் ஆண்டுத் தொடரில், சம்பியன்களாகியிருந்தது. ஆனால் அதன் பின்னர், 2006ஆம் ஆண்டிலும் இவ்வாண்டிலும், உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கு முயன்று, தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையிலேயே, 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு, இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என, சங்கத்தின் தவிசாளர் கிரெக் கிளார்க் தெரிவித்தார். அடுத்த கால்பந்தாட்டப் பருவகாலத்திலேயே, இது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் முடிவுகள் எடுக்கப்படாது எனவும், அவர் தெரிவித்தார்.

உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை, 32இலிருந்து 48ஆக, 2026ஆம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள நிலையில், அத்தொடரை, கனடா, மெக்ஸிக்கோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்தமை காரணமாக, ஒரே நாட்டால் இனிமேல் உலகக் கிண்ணத்தை நடத்த முடியாது என்ற எண்ணத்தில், சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் காணப்படுகிறது எனக் கருதப்படுகிறது.

அப்படியான சூழ்நிலை ஏற்படுமாயின், இங்கிலாந்து என இல்லாமல், ஐக்கிய இராச்சியமாக அத்தொடரை நடத்துவதற்கு, இங்கிலாந்து முயலமெனக் கருதப்படுகிறது. ஐக்கிய இராச்சியமென்பது, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகியன இணைந்த கூட்டாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .