2021 மே 06, வியாழக்கிழமை

இங்கிலாந்து எதிர் இலங்கை: முதலாவது டெஸ்ட் நாளை ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2016 மே 18 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. லீட்ஸிலுள்ள ஹெடிங்லீ மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளும் கடந்த முறை இங்கிலாந்தில் சந்தித்தபோது, 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி, 1-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. வெற்றி - தோல்வியின்றி முடிந்த முதலாவது போட்டியிலும், இலங்கை அணி சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், இம்முறை இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, அனுபவத்தில் மாத்திரமன்று, தன்னம்பிக்கையிலும் குறைவான அணியாகக் காணப்படுகிறது. குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின்றி, இலங்கையின் துடுப்பாட்ட வரிசை, பலவீனமானதாகவும் அனுபவமற்றதாகவும் காணப்படுகிறது.

பந்துவீச்சில் ஓரளவு நம்பிக்கை காணப்பட்டிருந்தாலும் கூட, கடந்த முறை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர்களில் முக்கியமானவரான தம்மிக்க பிரசாத், முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபெற மாட்டார் என்ற செய்தி, இலங்கை அணிக்குப் பலமான அடியாகும்.

இளைய துடுப்பாட்ட வீரர்களான குசால் மென்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரோடு, அனுபவம்வாய்ந்த அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சில் ரங்கன ஹேரத், இளைய வீரர் துஷ்மந்த சமீர ஆகியோர், இலங்கைக்கு நம்பிக்கை தருகின்றனர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, அனுபவமிக்க அலஸ்டெயர் குக்கின் தலைமையில், தெளிவான வெற்றி வாய்ப்புகளுடன் களமிறங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் குக், 10,000 ஓட்டங்களைக் கடப்பதற்கு இன்னமும் 36 ஓட்டங்களே தேவையாகவுள்ள நிலையில், தனிப்பட்ட ரீதியிலும், அவருக்கு முக்கியமான போட்டியாக இது அமைந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணிகள் -

இலங்கை: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, நிரோஷன் டிக்வெல்ல, ஷமின்ட எரங்க, துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால்.

இங்கிலாந்து: அலெக்ஸ் ஹேல்ஸ், அலஸ்டெயர் குக், நிக் கொம்ப்டன், ஜோ றூட், ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, மொயின் அலி, ஸ்டீவன் பின், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .