2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இங்கிலாந்து பிறிமியர் லீக்: சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறிமியர் லீக் போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றுள்ளதோடு, மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

மன்செஸ்டர் சிற்றி, சௌத்தாம்டன் அணிகளுக்கெதிரான போட்டியில் சிற்றி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில், சிற்றி சார்பாக போட்டியின் 9, 20, 69ஆவது நிமிடங்களில் முறையே கெவின் டீ புரூன், பபியான் டெல்ப், அலெக்ஸாண்டர் கொலரொவ் ஆகியோர் கோல்களைப் பெற்றதோடு, சௌத்தாம்டன் அணிக்காக போட்டியின் 49ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட கோலை ஷேன் லொங் பெற்றிருந்தார்.

மேற்படி போட்டியில் கெவின் டீ புரூன் ஆட்ட நாயகனாகத் தெரிவாகியிருந்ததோடு, இந்த வெற்றியுடன் இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர் அணிகளுக்கெதிரான போட்டியானது 1-1 என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது. இதில், போட்டியின் 24ஆவது நிமிடத்தில் லெய்செஸ்டர் அணியின் ஜெமி வர்டி கோலோன்றினைப் பெற்றபோது, தொடர்ச்சியாக 11ஆவது போட்டியில் கோல்களைப் பெற்ற சாதனையைப் புரிந்தார். எனினும் முதற்பாதியின் முடிவில் பஸ்டியான் சுவாஸ்டிகர் பெற்ற கோலின் மூலம் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் நாயகனாக ஜெமி வர்டி தெரிவானதோடு, சமநிலையான முடிவால் பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்பை யுனைட்டெட் இழந்திருந்தது.

இதேவேளை கிறிஸ்டல் பலஸ் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நியூகஸ்டில் அணியை வீழ்த்தியிருந்ததோடு, சந்தர்லாண்ட் அணியானது 2-0 என்ற ரீதியில் ஸ்டொக் சிற்றி அணியை வீழ்த்தியதோடு, வட்போர்ட் அணியானது 3-2 என்ற ரீதியில் அஸ்டன் வில்லாவை தோற்கடித்திருந்தது. தவிர, எவர்ற்றன், போர்ன்மௌத் அணிகளுக்கிடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .