2025 ஜூலை 16, புதன்கிழமை

இலங்கை எதிர் பாகிஸ்தான்: இ – 20 தொடர் இன்று

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடர், அபுதாபியில், இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இத்தொடரின் மூன்றாவது போட்டி பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெறவுள்ள நிலையில், லாகூருக்குச் செல்ல இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் மறுத்திருந்த நிலையில், அப்போட்டிக்கு தனித்ததொரு குழாமில்லாமல், மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து ஒரே குழாமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமில், இரண்டாம் நிலை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 5-0 என்றவாறு வெள்ளையடிக்கப்பட்டிருக்கும் இலங்கையணி, தமது இரண்டாம் நிலை வீரர்களை வைத்துக் கொண்டு மீள் எழுச்சியை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்திலுள்ளது. தோல்விக்கு மேல் தோல்வி கண்டுவரும் இலங்கையணி மீது எப்போதும் ஆதரவளிக்கும் இரசிகர்களே பொறுமையிழக்கத் தொடங்கியுள்ள நிலையில், இத்தொடரிலும் தோல்விகள் தொடர்ந்தால், முக்கியமான இந்தியச் சுற்றுப்பயணத்துக்கு முன்னர் வீரர்களும் மோசமான அழுத்தத்துக்குள்ளாகும் அபாய நிலை காணப்படுகின்றது.

இன்னொரு பக்கமாக, இத்தொடருக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் சிறப்பான திறமை வெளிப்பாடுகளை வெளிப்படுத்துமிடத்து, அடுத்து வரும் தொடரில் அவர்கள் முன்னணி வீரர்களுக்கு அழுத்தத்தை வழங்கக் கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.

இலங்கையணியின் துடுப்பாட்டமே பிரதான பிரச்சினையாகவுள்ள நிலையில், இத்தொடருக்காக அணித்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள திஸர பெரேரா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இவ்வாண்டு குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெற்ற தனுஷ்க குணதிலகவையே துடுப்பாட்டத்தில் இலங்கையணி நம்பியுள்ளது.

மறுபக்கம், பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்திவரும் பாகிஸ்தான், காயம் காரணமாக மொஹமட் ஆமிரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைத் தவறவிட்டிருந்தபோதும் அவருக்குப் பதிலாக விளையாடிய உஸ்மான் கான் போன்றோர் சிறப்பாக விளையாடியிருந்தனர். ஆக, பக்கார் ஸமன் அண்மைய போட்டிகளில் குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களைப் பெறாததே பாகிஸ்தான் கவலைப்படும் விடயமாக இருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X