2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: அடுத்த சுற்றில் ஸ்பெய்ன், போர்த்துக்கல்

Editorial   / 2018 ஜூன் 26 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு குழு பியிலிருந்து ஸ்பெய்னும் போர்த்துக்கல்லும் தகுதிபெற்றுள்ளன.

நேற்றிரவு இடம்பெற்ற மொராக்கோவுடனான போட்டியை ஸ்பெய்ன் சமநிலையில் முடித்துக் கொண்டதைத் தொடர்ந்தும் ஈரானுடனான போட்டியை போர்த்துக்கல் சமநிலையில் முடித்துக் கொண்டதை தொடர்ந்துமே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதிபெற்றுள்ளன.

மொராக்கோ, ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டியில், அன்ட்ரே இனியஸ்டா, சேர்ஜியோ றாமோஸின் மோசமான தவறு காரணமாக, போட்டியின் 14ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற காலிட் பூட்டைப் மொராக்கோவுக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அன்ட்ரே இனியஸ்டா கொடுத்தநுட்பமான பந்துப்பரிமாற்றத்தை இஸ்கோ கோலாக்க கோலெண்ணிக்கை சமமானது.

இந்நிலையில், போட்டியின் 81ஆவது நிமிடத்தில், ஹெர்வே றெனார்ட்டிடமிருந்து வந்த மூலையுதையை யூசுப் என் நெஸ்ரி தலையால் முட்டிக் கோலாக்க மொராக்கோ மீண்டும் முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதி நிமிடங்களில் டனி கர்வகாலிடமிருந்து வந்த பந்தை லாகோ அஸ்பஸ் கோலாக்க இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் ஸ்பெய்ன் முடித்துக் கொண்டது.

போர்த்துக்கல், ஈரான் அணிகளுக்கிடையே  இடம்பெற்ற போட்டியின் முதற்பாதி முடிவில் றிக்கார்டோ குவாரஸ்மா பெற்ற கோலால் போர்த்துக்கல் முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதிக் கணங்களில் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் சர்ச்சைக்குரிய தெரிவில் வழங்கப்பட்ட பெனால்டியை கரிம் அன்சரிபர்ட் கோலாக்க இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. குறித்த பெனால்டியைத் தொடர்ந்து மெஹ்டி தறெமிக்கு கோல் பெறும் வாய்ப்பொன்றிருந்து, ஈரான் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பிருந்த நிலையில், அவர் அதை கோலாக்கத் தவறியிருந்தார்.

குறித்த போட்டியின் முடிவுக்கப்பால், மேற்குறிப்பிட்ட பெனால்டியிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்ட மஞ்சள் அட்டையிலும் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு பலத்த விமர்சனத்தை எதிர்நோக்கியிருந்தது.

பெனால்டி வழங்கப்பட்ட சம்பவத்தின்போது சர்டார் அஸ்மூன் உதைந்த பந்து செட்ரிக் சொராஸின் கையில் பட்டிருந்தபோதும் பந்து செல்லும் திசையை நோக்கி செட்ரிக் சொராஸ் வேண்டுமென்றே கையை நீட்டினாரா என்பது சந்தேகமாகவேயுள்ளது.

இதேவேளை, மொர்டெஸா பெளராலிகஞ்சிக்கு முன்னால் செல்லும் முகமாக அவரது முகத்தில் கையை வைத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வீழ்த்தியிருந்தார். இதற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட வேண்டுமா என நீண்ட நேரம் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால் ஆராயப்பட்டு இறுதியாக மஞ்சள் அட்டையே காண்பிக்கப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்திலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னணி வீரராகவிருப்பதால் சிவப்பு அட்டை வழங்கப்படவில்லையென விமர்சனங்கள் எழுந்திருந்தன.

எவ்வாறாயினும், கிறிஸ்டியானோ ரொனால்டோ சயீட் எஸாடொலாஹியால் வீழ்த்தப்பட பெனால்டி வழங்குமாறான கோரிக்கைகளை நிராகரித்த மத்தியஸ்தர், பின்னர் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் உதவியுடன் தனது முடிவை மாற்றி சரியான முடிவாக பெனால்டியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், குறித்த பெனால்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கத் தவறியிருந்தார்.

அந்தவகையில், போர்த்துக்கல்லுடனான போட்டியையும் மொராக்கோவுடனான போட்டியையும் சமன் செய்திருந்த ஸ்பெய்ன், ஈரானுடனான போட்டியை வென்றிருந்த நிலையில் ஐந்து புள்ளிகளைப் பெற்று குழு பியின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது. ஸ்பெய்ன், ஈரானுடனான போட்டிகளில் சமநிலை முடிவு, மொராக்கோவை வென்றதென போர்த்துக்கல்லும் ஐந்து புள்ளிகளைப் பெற்றிருந்தபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் போர்த்துக்கல் குழுவில் இரண்டாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் பெற்றது.

குறித்த குழுவில் இடம்பெற்றிருந்த ஏனைய அணிகளான ஈரான், மொராக்கோ ஆகியன குழுநிலைப் போட்டிகளுடன் இவ்வுலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறின. ஈரான், மொராக்கோவை வென்றதுடன், போர்த்துக்கல்லுடனான போட்டியை சமன்செய்ததுடன், ஸ்பெய்னுடன் தோற்ற நிலையில் நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தது. மொராக்கோ, போர்த்துக்கல்லுடனான போட்டியை சமன்செய்ததுடன், ஸ்பெய்ன், ஈரானுடனான போட்டிகளில் தோல்வியடைந்திருந்த நிலையில் ஒரு புள்ளியையே பெற்றிருந்தது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில், 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை உருகுவே வென்றிருந்தது. உருகுவே சார்பாக, லூயிஸ் சுவாரஸ், எடின்சன் கவானி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற மற்றைய குழு நிலைப் போட்டியில், எகிப்தை 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வென்றிருந்தது. சவூதி அரேபியா சார்பாக, சல்மான் அல் பராஜ், சலீம் அல் டெளசரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எகிப்து சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றார்.

அந்தவகையில், ரஷ்யா, சவூதி அரேபியா, எகிப்தை வென்று ஒன்பது புள்ளிகளுடன் உருகுவே குழு ஏயிலிருந்து முதலாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது. சவூதி அரேபியாவையும் எகிப்தையும் வென்றதுடன் உருகுவேயிடம் தோல்வியைத் தளுவிய ரஷ்யா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

குறித்த குழுவில், எகிப்தை வென்றதுடன், உருகுவே, ரஷ்யாவிடம் தோல்வியைத் தளுவிய சவூதி அரேபியா மூன்று புள்ளிகளையும் உருகுவே, ரஷ்யா, சவூதி அரேபியாவிடம் தோல்வியைத் தளுவிய எகிப்து புள்ளிகளெதையும் பெறாதும் குழுநிலைப் போட்டிகளுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறின.

அந்தவகையில், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், போர்த்துக்கல்லை உருகுவேயும் ரஷ்யாவை ஸ்பெய்னும் சந்திக்கவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .