2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஐ.அ பகிரங்க டென்னிஸ்: செரினா, மரே முன்னேற்றம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில், உலகின் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், ஆண்களில் இரண்டாம் நிலை வீரர் அன்டி மரே ஆகியோர், 4ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் சுவீடனின் ஜொஹன்னா லார்ஸனை எதிர்கொண்ட அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

4ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, 33ஆம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியாவை, 6-2, 6-3 என்ற செட் கணக்கிலும், 5ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 34ஆம் நிலை வீராங்கனையான ஹங்கேரியின் திமியா பாபோஸை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கிலும், 6ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 27ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் லாரா சிகெமுன்ட்டை 6-1, 6-2 என்ற செட் கணக்கிலும் வென்றனர். ஏனையோரில், 11ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 12ஆம் நிலை வீராங்கனை கார்லா சுவரேஸ் நவரோ ஆகியோரும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

18ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லிசென்கோவா, 20ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஆகியோர், தோல்வியடைந்து வெளியேறினர்.

ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில் 2ஆம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, இத்தாலியின் பவோலா லொரென்ஸியை, 7-6, 5-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். 3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா, பிரித்தானியாவின் டானியல் எவன்ஸ், 4-6, 6-3, 6-7, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். 7ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, பிரான்ஸின் நிக்கொலஸ் மஹூட்டை, 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

13ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் டேவிட் பெரர், 16ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் நிக் கிரிஜியோஸ் ஆகியோர், 3ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .