Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழர்களின் இரு வரலாற்றுப் புகழ்பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 15-வது "இந்துக்களின் சமர்" (Battle of the Hindus) கிரிக்கெட் பெருவிழா, கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் மிக விமரிசையாக இன்று (13) ஆரம்பமானது.
கொழும்பு இந்துக் கல்லூரியின் 75-வது ஆண்டு வைர விழாவினை முன்னிட்டு, இம்முறை இப்போட்டி வழக்கத்தை விடவும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோர் பங்கேற்றனர்.
பாடசாலை இசைக்குழுக்களின் அணிவகுப்பு மரியாதையுடன் வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றப்பட்டு, இரு பாடசாலை அதிபர்களான இளையதம்பி இளங்கேஸ்வரன் (கொழும்பு) மற்றும் ரத்தினம் செந்தில்மாறன் (யாழ்ப்பாணம்) ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் நடைபெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாட்டத்தைத் (Batting) தெரிவு செய்தனர்.
காலை 9:55 மணிக்கு ஆட்டம் ஆரம்பமானது முதல், மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பழைய மற்றும் தற்போதைய மாணவர்கள் வாத்தியங்கள் முழங்கத் தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இன்றும் நாளையும் (மார்ச் 13, 14) நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில், வைர விழாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கிண்ணத்தைக் கைப்பற்றப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நன்றி: ஞான பிரசாந்தன்





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .