2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘கோலியின் நடவடிக்கைகளை பிரதிபலிப்பது கவலையளிக்கிறது’

Editorial   / 2017 நவம்பர் 01 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் தலைவர் விராத் கோலியின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை இளம் வீரர்கள் பிரதிபலிப்பது கவலையளிக்கிறது என்றவாறான கருத்துகளை, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட, ஏ அணிகளின் பயிற்றுவிப்பாளரான ராகுல் ட்ராவிட் வெளிபடுத்தியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ட்ராவிட், போட்டியென்பது இப்போதும் பெறுபேற்றைப் பற்றியதுதான். ஆகவே, கோலி போன்றவர்களிடன் எந்தக் குறையையும் காணமுடியாது என்று கூறியுள்ளார்.

தன்னைக் கோலி போல ஏன் நடக்கவில்லை என மக்கள் வினவியுள்ளதாகவும் ஆனால், அவ்வாறிருக்கும்போது தனது சிறப்பான பெறுபேற்றை வழங்க முடியாது என்று ட்ராவிட் மேலும் தெரிவித்துள்ளார்.

தன்னிடமிருந்து மிகவும் சிறந்ததை வெளிப்படுத்துவதாலேயே கோலி ஆக்ரோஷமாக செயற்படுவதாகக் கூறிய ட்ராவிட், அது எல்லோருக்கும் பொருந்தாது எனத் தெரிவித்ததுடன், அஜின்கியா ரஹானே மிகவும் வித்தியாசமானவர். வித்தியாசமான விடயங்களைச் செய்வதிலிருந்து, அவர் தன்னிடமிருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார் எனக் கூறியுள்ளார்.

அந்தவகையில், 12, 13, 14 வயதுகளிலுள்ள, அடுத்த விராட் கோலியாக வரவிரும்பும் சிறுவர்கள் தங்களது தன்மை வேறு என்பதை உணராது விராத் கோலி போன்று செயற்படவிரும்புவது தன்னை அச்சப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தை ஏ.பி டி வில்லியர்ஸிடம் இழந்த பத்தே நாட்களில் தனது முதலிடத்தை மீண்டும் விராத் கோலி கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்துக்கெதிரான, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இரண்டு சதங்களைப் பெற்று தரவரிசையில் 889 புள்ளிகளைப் பெற்று, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரொருவர் பெற்ற அதிக புள்ளிகளை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சச்சின் தென்டுல்கர் 887 புள்ளிகளை 1998ஆம் ஆண்டு பெற்றிருந்தார்.

இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், மூன்றிடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .