2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தகுதிபெற்றது ஆர்ஜென்டீனா

Editorial   / 2018 ஜூன் 27 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு ஆர்ஜென்டீனா தகுதிபெற்றுள்ளது.

குழு டியில் இடம்பெற்றிருந்த ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்துடனான தமது குழுநிலைப் போட்டியை சமன்செய்திருந்ததுடன், குரோஷியாவிடம் தோல்வியடைந்திருந்த நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற நைஜீரியாவுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.

குறித்த போட்டியின் 14ஆவது நிமிடத்தில், எவர் பனீகா கொடுத்த பந்தை நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி அபாரமாக கோலாக்க ஆரம்பத்திலேயே ஆர்ஜென்டீனா முன்னிலை பெற்றது. எனினும், ஸ்கேவியர் மஷரானோவின் மோசமான தவறொன்றால் கிடைக்கப் பெற்ற பெனால்டியை, போட்டியின் 51ஆவது நிமிடத்தில் விக்டர் மோஸஸ் கோலாக்க கோலெண்ணிக்கையை நைஜீரியா சமன் செய்தது. எவ்வாறாயினும் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் கப்ரியல் மெர்காடோவிடமிருந்து பெற்ற பந்தை மார்கோஸ் றோஜோ கோலாக்க இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வெற்றிபெற்றது.

இதேவேளை, நைஜீரியா, ஆர்ஜென்டீனா ஆகியவற்றுடனான தமது குழுநிலைப் போட்டிகளில் வென்றிருந்த குரோஷியா, நேற்றிரவு இடம்பெற்ற ஐஸ்லாந்துடனான போட்டியிலும் வெற்றிபெற்று குழு டியின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் 53ஆவது நிமிடத்தில் மிலன் படெல்ஜி பெற்ற கோலின் மூலம் குரோஷியா முன்னிலை பெற்றது. எனினும் டெஜன் லொவ்ரேனும் கையில் பந்து பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டியை போட்டியின் 76ஆவது நிமிடத்தில் ஜைல்வி சிகோர்ட்ஸன் கோலாக்க கோலெண்ணிக்கை சமமானது. எவ்வாறாயினும் போட்டியின் இறுதி நிமிடங்களில் இவான் பெரிசிக் பெற்ற கோலுடன் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது.

அந்தவகையில், குழு டியில் இடம்பெற்றுள்ள நைஜீரியா, ஐஸ்லாந்தை வென்றதுடன் குரோஷியாவுடனும் ஆர்ஜென்டீனாவுடனும் தோல்வியுற்ற நிலையிலும் ஐஸ்லாந்து, ஆர்ஜென்டீனாவுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதுடன், நைஜீரியா, குரோஷியாவிடம் தோல்வியடைந்த நிலையில், குழு நிலைப் போட்டிகளுடன் இவ்வாண்டு உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறுகின்றன.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற பிரான்ஸ், டென்மார்க் ஆகியவற்றுக்கிடையேயான குழு சி போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இதுதவிர, நேற்று  இடம்பெற்ற மற்றைய குழு சி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை பெரு வென்றிருந்தது. பெரு சார்பாக அன்ட்ரே கரில்லோ, பலோலோ குவேரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

அந்தவகையில், தமது குழுநிலைப் போட்டிகளில், அவுஸ்திரேலியாவையும் பெருவையும் வென்றதோடு, டென்மார்க்குடனான போட்டியை சமநிலையில் முடித்த பிரான்ஸ், ஏழு புள்ளிகளுடன் குழு சியின் வெற்றியாளர்களாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றது. அடுத்து, பெருவுடனான போட்டியில் வென்றதுடன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகளுடனான போட்டிகளை சமநிலையில் முடித்துக் கொண்ட டென்மார்க், ஐந்து புள்ளிகளுடன் குழு சியிலிருந்து இரண்டாவது அணியாக இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவை வென்றபோதும் டென்மார்க், பிரான்ஸ் அணிகளுடனான போட்டியில் தோல்வியைத் தளுவிய பிரான்ஸும் டென்மார்க்குடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதுடன், பிரான்ஸ், பெருவிடம் தோல்வியடைந்த அவுஸ்திரேலியாவும் குழுநிலைப் போட்டிகளோடு இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறின.

அந்தவகையில், இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், ஆர்ஜென்டீனாவை பிரான்ஸும் டென்மார்க்கை குரோஷியாவும் சந்திக்கவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .