2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பங்களாதேஷுக்கெதிராக மயிரிழையில் தோற்றது ஆப்கான்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான், தமக்கான வெற்றி வாய்ப்பை, இறுதி நேரத்தில் தவறவிட்டது.

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி நேரத்தில் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியிருந்தது.
துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 80 (98), மகமதுல்லா 62 (74), ஷகிப் அல் ஹஸன் 48 (40), இம்ருல் கைய்ஸ் 37 (53) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் தவ்லட் ஸட்ரன் 4, மொஹமட் நபி 2, றஷிட் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

266 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி, 40.1 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இறுதி 24 பந்துகளில் 5 விக்கெட்டுகள் கைவசமிருக்க 28 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஆப்கானிஸ்தானே வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 50 ஓவர்களின் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 7 ஓட்டங்களால் அவ்வணி தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஹஷ்மதுல்லா ஷகிடி 72 (110), றஹ்மத் ஷா 71 (93), மொஹமட் ஷஷாத் 31 (21), மொஹமட் நபி 30 (24) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட் 4, ஷகிப் அல் ஹஸன் 2, மஷ்ரபி மோர்தஷா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக,ஷகிப் அல் ஹஸன் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .