2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டை வீழ்த்தியது ஆர்சனல்

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில், அவ்வணியை ஆர்சனல் வீழ்த்தியது.

இப்போட்டியின் ஆரம்பத்தில், இலகுவாக கோல் பெறும் வாய்ப்பொன்று போலத் தோன்றியதை, கோல் கம்பத்தின் மீது மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்கள வீரர் றொமெலு லுக்காக்கு உதைந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, போட்டியின் 12ஆவது நிமிடத்தில், பெனால்டி பகுதிக்கு வெளியேயிருந்து ஆர்சனலின் மத்தியகள வீரர் கிரனிட் ஸாகா கோல் கம்பத்தை நோக்கி உதைந்தபோது, அதை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் தடுப்பாரென எதிர்பார்க்கப்பட்டபோதும், அவர் அதை தடுக்காமல் விட ஆரம்பத்திலேயே ஆர்சனல் முன்னிலை பெற்றது.

இக்கோலைத் தொடர்ந்து, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகள வீரர் பிரட், கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. றொமேலு லுக்காக்குவின் கோல் கம்பத்தை நோக்கி இரண்டு உதைகளை ஆர்சனலின் கோல் காப்பாளர் பேர்ண்ட் லெனோ தடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரட்டால், ஆர்சனலின் முன்கள வீரரான அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே தள்ளி வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை, போட்டியின் 69ஆவது நிமிடத்தில் ஆர்சனலின் இன்னொரு முன்கள வீரரான பியர்-எம்ரிக் அபுமெயாங் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

குறித்த இரண்டாவது கோல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, களத்துக்குள் புகுந்த இரசிகரொருவர், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர் கிறிஸ் ஸ்மோலிங்கை தள்ளி விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரரேஸுடனான போட்டியை 1-1 என்ற்a கோல் கணக்கில் செல்சி சமநிலையில் முடித்திருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஈடின் ஹஸார்ட் பெற்றிருந்ததோடு, வொல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை றாவுல் ஜிமென்ஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற பேர்ண்லியுடனான போட்டியை 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ, சாடியோ மனே ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்த நிலையில், பேர்ண்லி சார்பாக அஷ்லி வெஸ்ட்வூட், ஜொஹன் பேர்க் குன்ட்முன்ட்சண் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், நான்காமிடத்துக்கு ஆர்சனல் முன்னேறிய நிலையில், ஐந்தாமிடத்துக்க்கு மன்செஸ்டர் யுனைட்டெட் கீழிறங்கியுள்ளது. தவிர, முதலாமிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றிக்கும் தனக்குமிடையிலான வித்தியாசத்தை ஒரு புள்ளியாக லிவர்பூல் குறைத்துக் கொண்டது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசை பின்வருமாறு,

  1. மன்செஸ்டர் சிற்றி 74 புள்ளிகள்
  2. லிவர்பூல் 73 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 61 புள்ளிகள்
  4. ஆர்சனல் 60 புள்ளிகள்
  5. மன்செஸ்டர் யுனைட்டெட் 58 புள்ளிகள்
  6. செல்சி 57 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .