2021 மே 11, செவ்வாய்க்கிழமை

மே. தீவுகளை வெல்லுமா இலங்கை?

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை வெள்ளையடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அவ்வணியின் தலைவர் கெரான் பொலார்ட்டுடன், டுவைன் பிராவோ, அன்ட்ரே ரஸல் உள்ளிட்டோரைக் கொண்டமைந்த மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துவதற்கு இலங்கை சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

ஏனெனில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கையின் அண்மைய பெறுபேறுகள் மோசமானதாகக் காணப்படுகிறது. இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான இலங்கையணியின் தலைவராக இருக்கும் லசித் மலிங்க, தனது தனிப்பட்ட பெறுபேறுகளுக்கு அப்பால் அணியைக் கட்டியெழுப்பி பெறுபேறுகளை பெறுவது அத்தியாவசியமாகிறது இல்லாவிடின் தொடர் தோல்விகளையே இலங்கை எதிர்நோக்கும்.

அந்தவகையில் லசித் மலிங்க, இசுரு உதான, லஹிரு குமார, வனிடு ஹஸரங்கவைக் கொண்டமையும் என இலங்கையின் பந்துவீச்சுவரிசையானது, அன்ட்ரே ரஸல், கெரான் பொலார்ட், ஷிம்ரோன் ஹெட்மயர், டுவைன் பிராவோ, நிக்கலஸ் பூரான் உள்ளிட்ட அதிரடித் துடுப்பாட்டவீரர்களின் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

இதேவேளை, துடுப்பாட்டப் பக்கத்திலும் குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களைப் பெறுவது அவசியமாகையிலேயே திஸர பெரேரா, தசுன் ஷானக உள்ளிட்டோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடுவது சாத்தியமாகும்.

மறுபக்கமாக மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரையில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் பலம் வாய்ந்ததாகக் காணப்படும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் தமது திறமையை நிரூபிக்க வேண்டியதாகவுள்ளது.

ஏனெனில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இவ்வாண்டு நடைபெறவுள்ள நிலையில் நடப்புச் சம்பியன்களாகவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், உலகக் கிண்ணத்துக்கு முன்பாக தமது பெறுபேறுகளில் உச்சத்தை காண்பிக்கவேண்டியுள்ளது.

அந்தவகையில், அன்ட்ரே ரஸல், நிக்கலஸ் பூரான், ஷிம்ரோன் ஹெட்மயர், கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ, றொவ்மன் பவல் என அதிரடித் துடுப்பாட்டவீரர்களால் நிறைந்திருக்கும் மேற்கிந்தியத் தீவுகளானது லென்டில் சிமொன்ஸ் அல்லது பிரண்டன் கிங் ஆகியோர் இனிங்ஸின் பெரும்பாலான பகுதிக்கு ஓரு முனையில் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடுவது அவ்வணிக்கு பலமளிக்கும்.

இதேவேளை, டுவைன் பிராவோவின் மீள்வருகையானது மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சுவரிசைக்கு பலம் சேர்க்கையில், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஒஷேன் தோமஸ் உள்ளிட்டோரும் பந்துவீச்சுவரிசையின் முக்கியமான வீரர்களாகக் காணப்படுகின்ற நிலையில் இவர்கள் எவ்வாறு செயற்படுகின்றர் என்பது மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பில் தாக்கம் செலுத்தும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X