2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: போல்ட்டுக்கு ட்ரிபிள் ஹட்ரிக்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஜமைக்கா வென்ற நிலையில், 2008ஆம் ஆண்டு பீஜிங், 2012ஆம் ஆண்டு இலண்டன், தற்போது 2016ஆம் ஆண்டு றியோ என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் தான் பங்குபற்றிய 100 மீற்றர், 200 மீற்றர், 4x100 மீற்றர் என அஞ்சல் என மூன்று வகையான போட்டிகளிலும் தங்கம் வென்று, ஒன்பது தங்கப் பதக்கங்களுடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு உசைன் போல்ட் விடை கொடுத்துள்ளார். இவ்வாறான அடைவுகளைப் பெற்ற ஒரேயொரு வீரர் போல்ட் ஆவார்.

போல்ட், அஸாபா பவல், யொஹான் பிளேக், நிக்கொல் அஷ்மேட் ஆகியோரை உள்ளடக்கிய ஜமைக்கா அணி 37.27 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கம் வென்றதுடன், அதிர்ச்சிகரமாக ஜப்பான் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், கனடா வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.

இதில், மைக் றொட்ஜர்ஸ், ஜஸ்டின் கட்லின், டைஸன் கே, ட்ரயோவொன் ப்ரோமெல் ஆகியோரை உள்ளடக்கிய அமெரிக்க அணி வெண்கலப் பதக்கத்தை வென்றதாக கொண்டாடியபோதும், முதலாவது அஞ்சல் கோல் பரிமாற்றத்தின்போது றொட்ஜர்ஸிடம் இருந்து முன்னரே கட்லின் கோலைப் பெற்றதாக அமெரிக்க அணி தகுதி பெறாமற் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள போல்ட், நான் அதி சிறந்தவன் என்று கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெறவுள்ள உலக சம்பியன்ஷிப்போடு ஓய்வு பெறும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ள போல்ட், 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 34 வயதாகும் போல்ட், அதில் பங்கேற்கமாட்டார்.

ஒன்பதாவது தங்கப் பதக்கத்தை வென்ற போல்ட், அதிக தங்கப் பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் தடகள வீரர்கள் என்ற சாதனையை, அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீரரும் நீளம் பாய்தல் வீரருமான கார்ல் லூயிஸுடனும் பின்லாந்தின் நீண்ட தூர ஓட்ட வீரரான பாவோ நுர்மியுடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .