Gopikrishna Kanagalingam / 2015 நவம்பர் 29 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணி, சாதனை வரலாற்றுப் புத்தகங்களில் தமது பெயரை இணைத்துக் கொண்டது. நியூசிலாந்துக்கெதிரான இந்தப் போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கு 5 விக்கெட்டுகளால் வெற்றி கிடைத்தது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் 3ஆவது நாள் இன்றாகும்.
187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
வேகமான ஆரம்பமாக, முதலாவது விக்கெட்டுக்காக 5.3 ஓவர்களில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 62 ஓட்டங்களுடன் இலகுவான வெற்றியை நோக்கிப் பயணித்தது. ஆனால், சிறு இடைவெளியில் டேவிட் வோணரும் ஸ்டீவ் ஸ்மித்தும் ஆட்டமிழக்க, 3 விக்கெட்டுகளை இழந்து 66 ஓட்டங்களுடன் தடுமாறியது.
எனினும், அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ் மூவரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, அவுஸ்திரேலிய அணிக்கு முன்னிலையை வழங்கினர்.
துடுப்பாட்டத்தில் ஷோன் மார்ஷ் 49 ஓட்டங்களையும் டேவிட் வோணர் 35 ஓட்டங்களையும் அடம் வோஜஸ், மிற்சல் மார்ஷ் இருவரும் தலா 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், ட்ரென்ட் போல்ட்ற் 5 விக்கெட்டுகளையும் டக் பிரேஸ்வல், மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக, 5 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், அறிமுக வீரர் மிற்சல் சான்ட்னெர் 45, றொஸ் டெய்லர் 32, டக் பிரேஸ்வல் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், மிற்சல் ஸ்டார் இல்லாத நிலையில் சிறப்பாகப் பந்துவீசிய அவுஸ்திரேலிய அணி சார்பாக, ஜொஷ் ஹேஸல்வூட் 6, மிற்சல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் நேதன் லையன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 202 ஓட்டங்களையும் பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 224 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
இப்போட்டியின் நாயகனாக ஜொஷ் ஹேஸல்வூடும், தொடரின் நாயகனாக டேவிட் வோணரும் தெரிவாகினர்.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரை அவுஸ்திரேலிய அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .