2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வலென்சியாவிடம் வீழ்ந்தது பார்சிலோனா

Editorial   / 2019 மே 27 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டியில், வலென்சியாவிடம் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வீழ்ந்தது.

றியல் பெட்டிஸின் மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த இறுதிப் போட்டியின் எட்டாவது நிமிடத்திலேயே தனது பகுதியை நோக்கி பார்சிலோனாவின் பின்களவீரர் கிளமன்ட் லெங்லட் வழங்கிய பந்தைக் கைப்பற்றிய வலென்சியாவின் முன்களவீரரான றொட்றிகோ, அதை கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தியபோதும் அதை பார்சிலோனாவின் பின்களவீரரான ஜெராட் பிகே தடுத்திருந்தார்.

எவ்வாறெனினும், அடுத்த 13ஆவது நிமிடத்தில் சக பின்களவீரரான ஜொஸே காயா வழங்கிய பந்தைக் கோலாக்கிய வலென்சியாவின் முன்களவீரரான கெவின் கமெய்ரோ, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதற்கடுத்த 12ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரரான கார்லோஸ் சொலரிடமிருந்தான பெற்ற பந்தை றொட்றிகோ கோலாக்க, தமது முன்னிலையை வலென்சியா இரட்டிப்பாக்கியது.

அந்தவகையில், முதற்பாதி முடிவு வரைக்கும் வேறெந்த கோலும் பெறப்படாத முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வலென்சியா முன்னிலை வகித்த நிலையில், போட்டியின் 73ஆவது நிமிடத்தில் மூலையுதையொன்றிலிருந்து கோல் கம்பத்தை நோக்கி ஜெராட் பிகே தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்த நிலையில், அதைக் கோலாக்கிய பார்சிலோனாவின் முன்களவீரர் லியனல் மெஸ்ஸி, வலென்சியாவின் முன்னிலையை ஒரு கோலால் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில், இறுதி 15 நிமிடங்களில் பார்சிலோனா அதிரடி நகர்வுகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதுடன், வலென்சியாவின் முன்களவீரரான கொன்கலோ குயிடஸே தனதணிக்காக மூன்றாவது கோல் பெறுவதை நெருங்கியிருந்த நிலையில், இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற வலென்சியா சம்பியனானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X