Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான விலகல் முறையிலான சுற்றுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன தகுதிபெற்றிருந்தன.
துருக்கியக் கழகமான கலட்டாசரேயின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகே சமப்படுத்தியதைத் தொடர்ந்தே, குழுவில் இரண்டாமிடத்தை உறுதிப்படுத்தி விலகல் முறையிலான சுற்றுக்கு றியல் மட்ரிட் தகுதிபெற்றுக் கொண்டது.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற, ஏற்கெனவே குழு ஏயிலிருந்து விலகல் முறையிலான சுற்றுக்கு முதலில் தகுதிபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் றியல் மட்ரிட் முடித்திருந்தது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கரிம் பென்ஸீமா பெற்றிருந்தநிலையில், பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, கிலியான் மப்பே, பப்லோ சரபியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ்டுக்குடனான குழு சி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் மன்செஸ்டர் சிற்றி முடித்திருந்தபோதும், குரோஷியக் கழகமான டினமோ ஸக்ரெப்பை இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையில், குழுவில் முதலாமிடத்தை உறுதிப்படுத்தி விலகல் முறையிலான சுற்றுக்கு சிற்றி தகுதிபெற்றுக் கொண்டது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கிரேக்கக் கழகமான ஒலிம்பியாகோஸுடனான குழு பி போட்டியொன்றில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், குழுவிலிருந்து விலகல் முறையிலான சுற்றுக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடன் விலகல் முறையிலான சுற்றில் இணைந்து கொண்டது.
டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும், டெலே அல்லி, சேர்ஜி ஒரியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஒலிம்பியாகோஸ் சார்பாக, யூசுஃப் எல்-அரபி, ருபென் செமிடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சேர்பியக் கழகமான சிர்வெனா ஸவெஸ்டாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் வென்றிருந்தது. மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி நான்கு கோல்களையும், லியோன் கொரெட்ஸ்கா, கொரென்டின் டொலிஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான குழு டி போட்டியொன்றில், போலோ டிபாலா பெற்ற கோலுடன் ஏற்கெனவே விலகல் முறையான சுற்றுக்குத் தகுதிபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
26 minute ago
34 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
41 minute ago
47 minute ago