2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வென்றது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று இருபது-20 போட்டிகள் கொண்ட தொடரில் தரம்சாலாவில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் பவ் டுபிலிசிஸ் இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இந்திய அணி சார்பாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான சதம் கைகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 66 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள், 5, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 106 ஓட்டங்களையும், விராத் கோலி 27 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டம், மூன்று ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக சேர்த்த 138 ஓட்டங்களே, இந்தியா சார்பாக சர்வதேச இருபது-20 போட்டிகளில் அதிகூடிய இணைப்பாட்டம் ஆகும். தவிர ரோஹித் ஷர்மாவின் 106 ஓட்டங்களே இந்தியா சார்பாக சர்வதேச இருபது-20 போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்டமாகும். 

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட வேகப்பந்துவீச்சாளர் கைல் அபோட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தவிர கிறிஸ் மொரிஸ் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியபோதும் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். 

பதிலுக்கு 200 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்ப இணை ஹஷிம் அம்லா, ஏபி டீவில்லியர்ஸ்சும், ஜெ‌பி டுமினியும் கைகொடுக்க  அவ்வணி மூன்று பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியிலக்கை அடைந்தது. 

தென்னாபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் டுமினி ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டம், ஏழு, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டங்களையும், டீவில்லியர்ஸ் 32 பந்துகளில் ஏழு நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 51 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 24 பந்துகளில் ஐந்து, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 36 ஓட்டங்களையும் பெற்றனர். 

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய இரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். அறிமுக வீரர் அரவிந் ஒரு விக்கெட்டை கைப்பற்றியபோதும் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். 

போட்டியின் நாயகனாக டுமினி தெரிவானார். 

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபது-20 போட்டி கட்டாக்கில், எதிர்வரும் திங்கட்கிழமை 
(05) இலங்கை நேரப்படி ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .