
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. துடுப்பாட்டத்தில் மூன்றாவது குறைந்த ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்ட மிகப் பெரிய ஒருநாள் சர்வதேசப் போட்டி வெற்றி என்று இதனை வர்ணிக்க முடியும். இலங்கை அணி சந்தித்த மிக மோசமான ஒருநாள் சர்வதேசப் போட்டி தோல்வியும் இதுவே.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 24 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் குமார் சங்ககார கூடுதலான 13 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டான் 29 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஜேம்ஸ் ட்ரேட்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்கள்.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக இலங்கை அணி 2012ஆம் ஆண்டு 43 ஓட்டங்களைப் பெற்றமையே குறைந்த ஓட்டங்கள் ஆகும். அதற்கு பின் 55 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1986 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களில் விக்கெட்கள் இழப்புகள் இன்றி 73 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது. இதில் இயன் பெல் 41 ஓட்டங்களையும், அலிஸ்டயர் குக் 30 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக கிறிஸ் ஜோர்டான் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலை பெற்றுள்ளது.