2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மயிரிழையில் தப்பியது இலங்கை

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று (16) இலங்கை அணி மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி சமநிலையான முடிவைப் பெற்றுக்கொண்டது. 
 
ஐந்தாம் நாளான நேற்று (16), 390 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி, 90 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கை அடைவது கஷ்டம் என்ற நிலையில் ஆரம்பம் முதலே இலங்கை அணி சமநிலை முடிவை நோக்கி துடுப்பாடியது. ஆரம்பத்தில் நல்ல முறையில் விளையாடிய போதும் இறுதி நேரத்தில் வேகமாக விக்கெட்களை இழந்தனர். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குமார் சங்ககார 61 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 57 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டேர்சன் 4 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தனர். இதில் கரி பலன்ஸ் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்டான்  24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களையும், மத் ப்ரயொர் 86 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் பிரதீப் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 453 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 147 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 102 ஓட்டங்களையும் பெற்றனர். கௌஷால் சில்வா 63 ஓட்டங்கள். மஹேல ஜெயவர்த்தன 55 ஓட்டங்கள். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டேர்சன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். 
 
போட்டியின் நாயகனாக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார். இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X