
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக ஓட்டங்களை பெறத்தவறி வருகின்றமையே தினேஷ் சந்திமால் அணியால் நீக்கப்பட காரணம்.
உலக டுவென்டி டுவென்டி தொடரில் அணித் தலைவராக இருந்தவர் தனது தலைமைப் பொறுப்பை மட்டுல்லாமல் அணியில் இடத்தையும் இழந்தார். அதன் பினார் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் உபதலைவர் பதவியை இழந்ததுடன் அணியில் இடத்தையும் இழந்தார். டெஸ்ட் போட்டிகளின் விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்த்தன உபாதை காரணமாக அணியில் இருந்து விலக தினேஷ் சந்திமால் இடம் பிடித்தார். ஆனாலும் இப்போது அந்த வாய்ப்பையும் இழந்துள்ளார்.
இந்தப் போட்டிக்கு இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத விக்கெட் காப்பாளர் நிரோசன் டிக்வெல்ல அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இலங்கை A அணியின் போட்டிகளில் விளையாடி வந்த இவர் உடனடியாக இலங்கை அழைக்கப்பட்டுள்ள அதேவேளை தினேஷ் சந்திமால் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டியை சேர்ந்த 21 வயதான நிரோசன் டிக்வெல்ல 22 முதற்தரப் போட்டிகளில் 1,206 ஓட்டங்களை பெற்றுள்ளார். 34.45 என்ற சராசரியில் இந்த ஓட்டங்களை பெற்றுள்ளார். கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்விகற்ற இவர் என்.சி.சி அணிக்காக விளையாடி வருகின்றார்.