.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலம் அண்மித்து வருகின்றது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டியே லோர்ட்ஸ் மைதானத்தில் தான் விளையாடிய இறுதிப் போட்டி என 33 வயதான டோனி கூறியுள்ளார்.
லோர்ட்ஸ் வெற்றி பற்றிக் கூறும் வேளையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த வெற்றி பற்றிக் கூற தனக்கு வார்த்தைகள் இல்லை. இறுக்கமான போட்டி ஒன்று என்று கூறிய டோனி, 2007ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் ஸ்ரீஷாந்துடன் இணைந்து போதிய வெளிச்சமில்லாமல் போட்டி நிறுத்தப்படும் வேளையில் சமநிலையில் நிறைவு செய்தமை மறக்க முடியாத ஒரு போட்டி எனவும் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக டோனியின் டெஸ்ட் அணித்தலைமை விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வெற்றி மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் துடுப்பாட்டம் போதியளவு இல்லை என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. இந்த நிலையில் வெற்றி ஒன்றைப் பெற்றுக்காட்டி டோனி இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா அணி இன்னமும் டெஸ்ட் அணிக்கான தலைவரை தயார் செய்யவில்லை. எனவே, டோனி உடனடியாக தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடியாது. 2015ஆம் ஆண்டு இந்தியா அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. எனவே டோனியின் பங்கு முக்கியமாகவே உள்ளது.
இங்கிலாந்துக்கு இனி இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள குறைந்தது 2 வருடங்கள் எடுக்கும் என்பதும் டோனி இவ்வாறு கூறக் காரணமாக இருக்கலாம். 2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து அல்லது தலைமைப் பொறுப்பில் இருந்து டோனி விலகுவார் என எதிர் பார்க்கப்படுகின்றது.