2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மாநகரசபை உறுப்பினர் காணாமற்போனதற்கு த.ம.வி.பு. கட்சி செயலாளர்நாயகம் கண்டனம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)
முழு இலங்கையிலும் அமைதி நிலை உருவாகி, அதன் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை மலர்ந்துவரும் இந்தவேளையில், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காணாமல்போன சம்பவம் சமாதானத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கைகொண்ட அரசியல் கட்சிக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அதிர்ச்சியினையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர்நாயகம் ஏ.கைலேஸ்வரராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் அமைதி நிலை உருவாகி அதன்மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை மலர்ந்துவருகின்றது. அதேநேரம் யுத்தத்தினால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலைகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் படிப்படியாக சீர்செய்யப்பட்டு ஓர் அபிவிருத்தியை நோக்கி வளர்ச்சியடைந்துவரும் இவ்வேளையில், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி காணாமல்போனமையானது சமாதானத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கைகொண்டிருந்த அரசியல் கட்சியினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியினையும் ஆழ்ந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மக்கள் பிரதிநிதியான ஒருவர் காணாமல்போனதையிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மிக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தமிழர் அமைப்புகள் அனைத்துமே தற்போது ஜனநாயக வழியில் இணைந்துள்ளன. ஆயுதப்போராட்டம் என்பது தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தற்போது தமிழ் மக்கள் முழுமையாகவே ஜனநாயக வழிமுறையின் மீதும் சமத்துவமான சமாதானத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

எனவே இனிவரும் காலங்களில் அடக்குமுறைகளையோ, ஆயுதக் கலாசாரங்களையோ, வன்முறை சார்ந்த செயற்பாடுகளையோ, மேலதிக பண்புகளையோ, தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. எனவே உண்மையான சமத்துவமான சமாதானத்தை வளர்த்தெடுப்பதற்கும் அதனை கட்டிக்காப்பதற்கும் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினருமே முன்வரவேண்டும். இதற்காக மக்கள் சார்பு நிறுவனங்கள் அனைத்துமே தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயற்படவேண்டியிருக்கிறது.

இவ்வாறு அனைவருமே புதிய நம்பிக்கையுடன் செயற்படவேண்டியிருக்கும் இவ்வேளையில் மட்டக்களப்பு மாநகரத்தில், மாநகரசபை உறுப்பினர் ஒருவர் காணாமல்போன சம்பவத்தினை எந்தவொரு ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளோ, தனிநபர்களோ ஏற்றுக்கொள்ளமுடியாது.
எனவே, காணாமல்போன உறுப்பினரை கடத்தி அல்லது மறைத்துவைத்திருப்பவர்கள் அவரை விடுதலைசெய்து மட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டுவர ஒத்துழைக்கவேண்டும்.

மேலும் மக்கள் சமாதானத்தின் மீது நம்பிக்கைகொண்டுள்ள இந்தவேளையில், இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் மூலம் எதையும் சாதித்துவிடமுடியாது. இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையும் அச்சத்தினையும் ஏற்படுத்துமே தவிர, ஆரோக்கியமான சமாதானத்தை ஏற்படுத்தமுடியாது என்பதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரான நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனவே காணாமல்போன மாநகரசபை உறுப்பினரை உடனடியாக விடுதலைசெய்து தற்போது ஏற்பட்டிருக்கும் அவ நம்பிக்கையினத்தை களைவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .