2021 மே 15, சனிக்கிழமை

மட்டு-அம்பாரை எல்லை மீள் குடியேற்றக் கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் மு

Kogilavani   / 2011 நவம்பர் 15 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களிலுள்ள மீள் குடியேற்ற  கிராமங்களில் அண்மை காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக  கிராம மக்கள் அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
 
குறிப்பாக 35ஆம் குடியேற்ற கிராமம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களில் இது வரை யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துளளதுடன் 20இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
தமது கிராமத்திற்குள் இரவிலும் பகலிலும் நுழையும் யானைகளினால் இருப்பிடங்கள் மட்டுமன்றி தமது வயல்கள், பயிர்களும் சேதமாக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
கடந்த 1990 ஆம் ஆண்டிற்கு பின்னர் யுத்த சூழ் நிலை காரணமாக இரண்டு தடவைகள் கிராமத்தை விட்டு வெளியேறி மீளக் குடியேறிய தமது கிராம மக்கள் தற்போது யுத்தமற்ற சூழ்நிலையிலும்  யானைகளின் தொல்லை காரணமாக மீண்டும் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விஷ்ணு ஆலய நிர்வாகிகளில் ஒருவரான பாக்கியராஜா தர்மலிங்கம் தெரிவித்தார்.
 
ஏற்கனவே சில குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டன. இன்னும் சில குடும்பங்கள் வெளியேறத் தயாராகி வருகின்றன. மாலையர்கட்டு ஊடாக யானைகள் பாதுகாப்பு மின்சார வேலி அமைப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை முதல் கொக்கட்டிச்சோலை வரை அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள் ஊடாக தற்போது யானைகள் பாதுகாப்பு மின்சார வேலி அமைக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள குறித்த கிராமங்களுக்கு புதிய வழியொன்றின் ஊடாகவே யானைகள் இப்போது நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதையிலும் மின்சார வேலிகளை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த உயிரியல் பன்முகத் தன்மை மற்றும் யானைகள் பாதுகாப்பு அமைப்பின் முகாமைத்துவ பொறுப்பாளர் ஜயந்த ஜயவர்தனா  மக்கள் குடியிருப்பு, அபிவிருத்தி உட்பட பல்வேறு தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டுள்ளமையே யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதற்கு காரணமாக  அமைகின்றது.

கடந்த 1900 ஆம் ஆண்டில் 2 மில்லியன் மக்கள் வாழ்ந்தார்கள.;; காடுகள் 88 சத  வீதமாக இருந்தது. தற்போது 20 மில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள். காடுகள் 18 சத வீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே உணவு தேடி யானைகள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .