2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’அதிபர்கள், கல்வி அதிகாரிகளுக்கு இடமாற்றம் இல்லாமையால் பின்னடைவு’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 22 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தசாப்தங்களாக ஒரே பாடசாலைகளில்; கடமையாற்றும் அதிபர்களுக்கும், அலுவலகங்களில் கடமையாற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்படாமையால் அம்மாகாணங்களில் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,'முன்னொரு காலத்தில் கல்வியில் கொடி கட்டிப் பறந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்து வருவது கவலையளிக்கின்றது.

'கல்வி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் பொதுவான இடமாற்றக்கொள்கை கடைப்பிடிக்கப்படாமையே இதற்குக் காரணமாகும்.

'வடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுகின்றார்கள். இடமாற்றக் கொள்கை என்பது ஆசிரியர்களுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றது.

'அதேவேளை, தசாப்தங்களாக பல பாடசாலைகளில் கடமையாற்றும்; ஒரே அதிபர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெற்றுச்செல்லும் வரையிலும் கூட, அப்பாடசாலைகளிலேயே கடமையாற்றுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறே, கல்வி நிர்வாக சேவையிலுள்ள அதிகாரிகளின் நிலைமையும் ஆகும்.

'கல்வி நிர்வாக சேவையில் இதுவொரு வெளிப்படையான அநீதியாகும்.

'தேசிய இடமாற்றக்கொள்கை அல்லது மாகாணத்துக்கென்றே தனித்துவமான இடமாற்றக் கொள்கைகளின் அடிப்படையில், அனைத்துக் கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கும் அதிபர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். அப்பொழுதே ஊழல், மோசடிகளைக் குறைக்கவும் துஷ்பிரயோகங்களை ஒழிக்கவும்‪ ஆளுமைகள், திறமைகள், வளங்கள், ஆக்கபூர்வச் செயற்பாடுகள் என்பவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் வழியேற்படும்.

'இந்த விடயத்தில் இடமாற்றத்துக்கான தேசிய கொள்கையை அல்லது மாகாணத்துக்கென்று தனித்துவமான கொள்கையை மாகாண நிர்வாகம் பின்பற்ற வேண்டும். ஆனால், இந்த இரண்டு கொள்கைகளும் இல்லாத காரணத்தால் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வித்தரம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

'வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுமே கொண்டுள்ளன. எனவே, இவ்விரு ஆளுகைச் சக்திகளும் இந்த மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கல்விப் பின்னடைவுக்கான விடயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X