2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’அவசர இடமாற்றம் ஆராயப்பட வேண்டியது’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

"திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு அவசர அவசரமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதன் மர்மம் என்ன என்பது ஆராயப்பட வேண்டிய விடயமே" என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், நேற்று (31) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால், நேற்று (31) மாலை 4 மணிக்கு, திணைக்களம் மற்றும் அமைச்சுகளில் கடமையாற்றிய 7 செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராக இருந்த ஏ.எச்.எம்.அன்சார் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவுக்கும் பயிற்சி மற்றும் ஆளணிப்பிரிவின் செயலாளராக இருந்த திருமதி கலாமதி பத்மராஜா சுகாதார அமைச்சின் செலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த கே.கருணாகரன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்கும், வீதி அபிவிருத்தித் திணைக்கத்தில் பணியாற்றிய ஐ.கே.ஜீ.முத்துபண்டா பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும், அதிலிருந்த எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க, கல்வி அமைச்சுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.பி.எம்.அசங்க அபேவர்த்தன, ஆளுநரின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம், அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நிர்வாக சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில், கேட்டபோது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம்,

"இந்த இடமாற்றங்கள், புதிய ஆளுநரால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்ன நோக்கத்துக்காக இவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்று எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை. மத்திய அரசாங்கத்திலிருந்து இம்மாகாணத்துக்கென உள்வாங்கப்பட்ட செயலாளர்களை மாகாணத்துக்குள் தேவைக்கு ஏற்றவாறு இடமாற்றம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது.

இதற்கு சட்டரீதியாக , அரசியல் ரீதியான அமைச்சர்களிடம் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை.  ஆனால், எதிர்காலத்தில் அமைச்சரவையும், ஆளுநரும் மிகவும் நெருங்கிய உறவுகள் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த இடமாற்றம் ஒரு தடையாக இருக்காதா?

இருந்தாலும் இந்தச் செயலாளர்கள், கடந்த காலத்தில் அர்ப்பணிப்பாக நிர்வாகத் திறனைக் கொண்டு செல்வதற்கும் சமூக சேவையைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எதிர்காலத்திலும் சிறப்பான சேவையை ஆற்றுவார்கள்.

இருந்தாலும் இன்று (நேற்று) மாலை 4 மணிக்கு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டதன் மர்மம் என்ன என்பது ஆராயப்பட வேண்டிய விடயமே" என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X